முகப்பு
சென்னை

ரயில் சீசன் டிக்கெட் கட்டணம் கடும் உயர்வு

ரயில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணத்தின் அதிகப்படியான உயர்வும், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில் நிலவும் குழப்பமும் பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:11 AM
பகிர்:

ரயில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணத்தின் அதிகப்படியான உயர்வும், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில் நிலவும் குழப்பமும் பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

ரயில் கட்டண உயர்வு ஜனவரி 21-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து சென்னை புறநகர் மின்சார ரயில், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கான புதிய கட்டண விவரத்தை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கடற்கரைக்கும் பல்லாவரத்துக்கும் ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எழும்பூரில் இருந்து குரோம்பேட்டை முதல் மறைமலைநகர் வரை ரூ.10 என்று இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கும் இதே கட்டணம்தான்.

Advertisement

இதற்கடுத்து, மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூரில் இருந்து கடற்கரை, பல்லாவரம் செல்ல ஒரு மாதத்துக்கு ரூ.85, மூன்று மாதத்துக்கு ரூ.230. எழும்பூரில் இருந்து குரோம்பேட்டை முதல் மறைமலைநகர் வரை செல்ல மாதம் ரூ.160, மூன்று மாதத்துக்கு ரூ.435 என உயர்த்தப்பட்டுள்ளது.

எழும்பூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு செல்ல மாதம் ரூ.235, மூன்று மாதத்துக்கு ரூ.635 என உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வியாசர்பாடி, அன்னனூர், ராயபுரம், கத்திவாக்கம், மந்தவெளிக்கு பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் ரூ.5 கட்டணமாக உள்ளது. சென்ட்ரல், கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 கட்டணமாக உள்ளது.

இதேபோல சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வியாசர்பாடி, அன்னனூர், ராயபுரம், கத்திவாக்கம், மந்தவெளி செல்ல மாதாந்திர சீசன் டிக்கெட் ரூ.85, மூன்று மாதத்துக்கு ரூ.230 கட்டணமாகும்.

சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல மாதாந்திர சீசன் டிக்கெட் ரூ.180, மூன்று மாதத்துக்கு ரூ.495.

குழப்பம்: புறநகர் ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாதான் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்தது. ஆனால், தற்போது, புதிய கட்டண உயர்வுக்கும், அறிவிப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இதனால் பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் விளக்கம்: இது குறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியது: சில்லறை தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காகவே ரயில் கட்டணங்கள் அனைத்தும் ரூ.5, ரூ.10, ரூ.15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கிலோ மீட்டருக்கு உயர்த்தப்பட்ட கட்டண நிர்ணயத்துடன், சேவை வரியையும் சேர்த்து இந்தப் புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி மாதாந்திர சீசன் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே புதிய ரயில் டிக்கெட் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. ஜனவரி 21-ஆம் தேதிக்கு முன் சீசன் டிக்கெட் எடுத்தவர்கள் கூடுதல் டிக்கெட் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.

கட்டண விவர புத்தகம் விற்பனை

புறநகர், பயணிகள், எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர் பாஸ்ட், ஏழைகள் ரதம், ராஜ்தானி, சதாப்தி, யுவா, துரந்தோ ரயில்களில் எத்தனை கிலோ மீட்டருக்குக்கு எவ்வளவு கட்டணம் உயர்கிறது என்ற விவரங்கள் அடங்கிய புத்தகத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

இதில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணத்துக்கான அட்டவணையும் உள்ளது. பயணிகள் கட்டண அட்டவணைகள் என்ற பெயரில் இந்தியன் ரயில்வே கான்ஃபரன்ஸ் அசோசியேஷன் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை ரூ.20.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments