பேராபத்தை ஏற்படுத்தும் மின்னணு சாதனக் கழிவுகள்
பேராபத்தை ஏற்படுத்தும் மின்னணு சாதனக் கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த எள்ளளவு விழிப்புணர்வுகூட இந்திய மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை எனக் கவலை தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.
பேராபத்தை ஏற்படுத்தும் மின்னணு சாதனக் கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த எள்ளளவு விழிப்புணர்வுகூட இந்திய மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை எனக் கவலை தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.
இந்தக் கழிவுகளின் தொடர் பாதிப்புகள் காரணமாக கருச்சிதைவு, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு, புற்றுநோய் போன்ற பேராபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம், எங்கும் கணினி, அனைவரது கைகளிலும் கைப்பேசி என்ற நிலையைத் தாண்டி "ஸ்மார்ட் ஃபோன்', "டேப்லெட்' என்ற நிலையை உருவாக்கி வருகிறது. அது போதாதென்று, அரசுத் திட்டங்களின் காரணமாக அனைவரது வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற நிலை மாறி, அனைவரது வீட்டிலும் லேப்-டாப் என்ற நிலையும் உருவாகி வருகிறது.
Advertisement
உலகிலேயே அதிக அளவு கைப்பேசிகள் பயன்பாடு உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் இந்தியா முதலிடத்துக்கு வந்துவிடும் என்கின்றது புள்ளி விவரம்.
அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரப்படி 134 கோடியே 95 லட்சத்து 85 ஆயிரத்து 838 மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 122 கோடியே 73 லட்சத்து, 60 ஆயிரம் பேர் கைப்பேசி வைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 126 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் 92 கோடியே 43 லட்சத்து 187 ஆயிரத்து 927 பேர் கைப்பேசி வைத்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் அமெரிக்கா, அடுத்ததாக பிரேசில், ஐந்தாவது இடத்தில் ரஷியா ஆகியவை உள்ளன.
இவ்வாறு கைப்பேசிகளையும், பிற மின்னணு சாதனப் பொருள்களையும் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பொருள்கள் சந்தையில் அறிமுகமாகின்றபோது, பழையவற்றை தூக்கி எறிந்துவிட்டு புதியதை வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் டன் மின்னணு சாதனக் கழிவுகள் இந்தியாவில் உருவாவதோடு, பிற நாடுகளின் மின்னணு சாதனங்களின் கழிவுகளும் இந்தியாவில் கொட்டப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சியாளரும், தொழில் நிறுவன கழிவு மேலாண்மை சங்க நிர்வாகியுமான சங்கர் காங்கீவரம் கூறியது:
கணிணிகள், மடிக் கணிணிகள், கைப்பேசிகள், தொலைபேசிகள், சிடி பிளேயர், பிரின்ட்டர்கள், மின்னணு பொம்மைகள், கேமராக்கள், மைக்ரோவேவ் அடுப்பு ஆகியவைதான் பேராபத்தை ஏற்படுத்தும் மின்னணு சாதனக் கழிவுகள் பட்டியலில் இடம்பெறுகின்றன.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த மின்னணு சாதனக் கழிவுகள் மக்களுக்கு பாதிப்பின்றி அப்புறப்படுத்துவது முறையாக பின்பற்றப்படுகின்றன. அதாவது, அந்தப் பொருள்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்களே, பொருள்கள் பயன்படா நிலையை எட்டும்போது திரும்பப் பெற்றுக்கொள்கின்றன. இதற்காக பொருள்களின் பின்பக்கத்தில் அதற்கான அறிவிப்பையும், தொடர்பு எண்ணையும் குறிப்பிடுகின்றன.
ஆனால், இந்தியாவில் மின்னணு சாதனப் பொருள்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் அக்கழிவுகளை திரும்பப் பெறுவதில்லை.
இதனால், ஆயிரக்கணக்கான டன் மின்னணு சாதனக் கழிவுகள் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன.
அதுமட்டுமன்றி, இந்தியாவில் மின்னணு மறுசுழற்சி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் வளர்ந்த நாடுகள் பல ஆயிரம் டன் மின்னணு சாதனக் கழிவுகளை இந்தியாவில் கொட்டி வருகின்றன.
இதை அறிந்து விழித்துக்கொண்ட இந்திய அரசு, மின்னணு சாதனக் கழிவு மேலாண்மை, கையாளுதல் சட்டத்தை கடந்த 2011-இல் வடிவமைத்து 2012 மே மாதத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்தது.
ஆனால், 2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி 2013-14-ஆம் ஆண்டில் இந்தியாவில் 5 லட்சம் டன் முதல் 6 லட்சம் டன் மின்னணு சாதனக் கழிவுகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக அளவில் இயங்கி வரும் அனுமதி பெறாத மறுசுழற்சியாளர்கள் மின்னணு சாதனக் கழிவுகளை முறையாகக் கையாளுவதில்லை. எனவே, அறிமுகம் செய்துள்ள சட்டத்தை மேலும் வலுவானதாக மாற்ற வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்து என்றார்.
தமிழகம் 2-ஆவது இடம்
கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி, 2013-14 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5 லட்சம் டன் முதல் 6 லட்சம் டன் வரை மின்னணு சாதனக் கழிவுகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மாநிலங்களைப் பொருத்தவரை 10 மாநிலங்கள் 70 சதவீத மின்னணு சாதனக் கழிவுகளையும், அவற்றிலுள்ள 65 பெரு நகரங்கள் 60 சதவீதக் கழிவுகளையும் உருவாக்குகின்றன.
மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ளது.
மின்னணு சாதனக் கழிவுகளை அதிக அளவில் உருவாக்கும் முதல் 10 பெரு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் மும்பையும், அடுத்ததாக தில்லி, பெங்களூரு நகரங்களும் 4-ஆவது இடத்தில் சென்னையும் இடம்பெற்றுள்ளன என்கிறது புள்ளிவிவரம்.
அனுமதி பெறாத மறுசுழற்சியாளர்கள்
பயன்படுத்த முடியாத நிலைக்குச் செல்லும் மின்னணு சாதனக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம். ஏனெனில், கணிணிகள், மடிக் கணிணிகள், கைப்பேசி போன்ற மின்னணு சாதனப் பொருள்கள் செராமிக், சிலிகான் போன்ற கடினப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பேட்டரிகள், டயோடு போன்ற பொருள்கள் இடம்பெற்றிருக்கும்.
எனவே, இந்தக் கழிவுகளில் மீண்டும் பயன்படுத்தப்படக் கூடிய சிறு பொருள்கள் எடுத்துக்கொள்ளப்பட்டபின், மீதமுள்ள பொருள்கள் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப்பட்டு வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தப் பணிகள் முறையாக செய்யப்படுகின்றன. ஆனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்தப் பணிகள் முறையாகச் செய்யப்படுவதில்லை. அனுமதி பெறாத மறுசுழற்சியாளர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கிருப்பதே அதற்குக் காரணம்.
இவர்கள், இந்தக் கழிவுகளிலிருந்து தங்களுக்குத் தேவையான தங்கம், வெள்ளி, செம்பு போன்ற பொருள்களை எடுத்துக் கொண்டு எஞ்சும் கடினப் பொருள்களை சாதாரண வீட்டுக் குப்பைகளோடும், ஆறுகளிலும் தூக்கி வீசிவிடுகின்றனர்.
எனவே, தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்திருக்கும் இந்திய அரசு, ஆபத்தை உணர்ந்து மின்னணு சாதனக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.