தோல் தொழிற்சாலை கழிவுகளால் மலட்டுத்தன்மை அபாயம்
தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் உள்ள குரோமியம் சுற்றுச்சூழலைப் பாதிப்பதால் பெரியவர்களுக்கு மட்டுமன்றி, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்பது சென்னை பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் உள்ள குரோமியம் சுற்றுச்சூழலைப் பாதிப்பதால் பெரியவர்களுக்கு மட்டுமன்றி, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்பது சென்னை பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தோல் தொழிற்சாலைகள், மெழுகுவர்த்தி நிறுவனங்கள், சாயப்பட்டறை போன்ற நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் குரோமியம் சுற்றுச்சூழலை பாதிப்பதால், அந்த நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தோல் வியாதிகள், புற்றுநோய், வயிற்றுப் போக்கு, ஆண்-பெண் இரு பாலருக்கும் இனப்பெருக்கப் பாதிப்பு (மலட்டுத்தன்மை) ஏற்படும் என்பது ஏற்கெனவே பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குரோமியத்தின் நச்சுத் தன்மையால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைக்கும் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பதை சென்னைப் பல்கலைக்கழகம் தனது ஆய்வில் இப்போது உறுதி செய்துள்ளது.
Advertisement
சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாளமில்லா சுரப்பியியல் (என்டோகிரெய்னாலஜி) துறை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு, ஆராய்ச்சி முடிவுகள் குறித்த அறிக்கையை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் (டிஎஸ்டி) துறையிடமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடமும் சமர்ப்பித்துள்ளது.
புதிய கண்டுபிடிப்பு குறித்த ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த பேராசிரியர் மைக்கேல் அருள்தாஸ் "தினமணி'க்கு அளித்த பேட்டி:
சுற்றுச் சூழலில் குரோமியம் கலப்பு என்பது 2 பி.பி.எம். முதல் 5 பி.பி.எம். அளவு வரை இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதைவிட அதிக அளவு குரோமியம் கலப்பு இருக்குமானால், அது மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனத் தெரிவிக்கிறது.
ஆனால், சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி, இந்தியாவில் ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் 500 பி.பி.எம். முதல் 5,000 பி.பி.எம். அளவு வரை சுற்றுச்சூழலில் குரோமியம் கலப்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுபோன்ற புள்ளி விவரங்களைத் தொடர்ந்து, குரோமியம் நச்சுத் தன்மையால் எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆராய்ச்சியை சென்னைப் பல்கலைக்கழகமும், கிண்டியில் அமைந்துள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து மேற்கொண்டன.
ஆராய்ச்சியின் முதல் கட்டமாக, குறைந்த அளவு குரோமியம் கலப்பால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அடிப்படையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, குரங்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, மூன்று மாதங்கள் தொடர்ந்து குரோமியம் கலந்த நீரை உட்கொள்ளச் செய்து ஆய்வு செய்யப்பட்டது. முதலில் 50 பிபிஎம், 100 பிபிஎம், 200 பிபிஎம் பின்னர் 400 பிபிஎம் என்ற அளவிலான குரோமியத்தை நீரில் கலந்து உட்கொள்ளச் செய்தோம்.
அப்போது முதல் மாதத்திலேயே மாற்றம் தெரியத் தொடங்கியது.
அதாவது, குடிநீர் மூலம் உட்கொள்ளப்படும் குரோமியம் வெளியேறாமல் குரங்கின் உடலினுள் நிரந்தரமாகப் படிவதும், மெல்ல இனப் பெருக்கத் திறனை பாதிப்படையச் செய்வதும் கண்டறியப்பட்டது.
அதாவது, குரங்கின் உடலுறுப்பில் படிந்த குரோமியம் கரு முட்டைகள் முதிர்ச்சியடையும் செயல்பாட்டைத் தடுத்து, அது முதிர்ச்சியடையாத நிலையில் வெளியேற வழி வகுத்து அது மடியச் செய்வதைக் கண்டுபிடித்தோம். இதுபோல் ஆண் குரங்குக்கு விந்தணு எண்ணிக்கை படிப்படியாகக் குறைவதையும் கண்டறிந்தோம்.
இதன் மூலம் மிகக் குறைந்த அளவிலான குரோமியம், மலட்டுத் தன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதியானது.
இதற்கு அடுத்த கட்டமாக, இதுபோன்று குரோமியம் நச்சு பாதித்த பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து ஆராய முடிவு செய்தோம்.
இந்த ஆராய்ச்சிக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்தது.
இந்த ஆராய்ச்சிக்கு ஒரு கர்ப்பமடைந்த எலியை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினோம். இதில், எலிக்கு கருச் சிதைவு ஏற்படுவதையும், பிறக்கும் குட்டிகளின் எண்ணிக்கை குறைவதையும், ஆண் குட்டிகளைவிட பெண் குட்டிகள் அதிக அளவில் பிரசவிப்பதையும் கண்டறிந்தோம்.
அதோடு, தாயிடம் பால் குடிப்பதால் பாதிக்கப்பட்டு குட்டிகளுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுவதை உறுதி செய்தோம்.
இந்த பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சியோடு நின்று விடாமல், தீர்வையும் கண்டறிந்துள்ளோம் என்றார் அவர்.
பாதிப்பைப் போக்கும் வைட்டமின் மாத்திரைகள்
குரோமியம் உள்கொண்டதால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சில வைட்டமின்கள் கொடுத்ததன் மூலம், மீண்டும் இனப் பெருக்க சக்தியைப் பெறுவதை பேராசிரியர் மைக்கேல் அருள்தாஸ் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பாதிப்பு மட்டுமின்றி அதற்கான தீர்வையும் கண்டறியவேண்டும் என்பதே எங்களது ஆராய்ச்சியின் நோக்கமாக இருந்தது.
அதற்காக, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மாத்திரைகளை பழங்களுடன் கலந்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட குரங்குக்கும், எலிக்கும் கொடுத்து ஆய்வு செய்தோம்.
அப்போது, அவைகளுக்கு மீண்டும் கரு முட்டைகள் முதிர்வடைவதையும், விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதையும் காண முடிந்தது.
எனவே, பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து இதற்கென தனிக் குழுவை தமிழக அரசு அமைத்து தோல் தொழிற்சாலைகள், மெழுகுவர்த்தி உற்பத்தி நிறுவனங்கள், சாயப்பட்டறை போன்றவை உள்ள நகர்ப் பகுதிகளில் விரிவான ஆய்வை மேற்கொண்டு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதில், பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த மூன்று வைட்டமின் மாத்திரைகள் கொடுப்பதும் மிக அவசியம் என்றார் அவர்.
ராணிப்பேட்டை பகுதி காய்கறிகளில் குரோமியம் நச்சுக் கலப்பு
ஜகார்த்தாவின் செப்புலுநோம்பர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சுற்றுச்சூழல் பொறியியல் துறை சார்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இடம்பெற்றுள்ளன.
www.trisanita.org/japes என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ஆய்வறிக்கையில் இந்தப் புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் ராணிப்பேட்டை சிப்காட் பகுதி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள், பழங்களில் ஒரு கிலோ அளவில் எத்தனை மில்லி கிராம் குரோமியம், நிக்கல் போன்ற ஆபத்தை விளைவிக்கக் கூடிய நச்சுக்கள் எந்த அளவில் இடம்பெற்றுள்ளன என்ற விவரமும், நீர் நிலைகளில் எந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என்ற விவரமும் இடம்பெற்றுள்ளன.
இதில் அதிகபட்சம் 20 மில்லி கிராம் அளவில் குரோமியம் கலந்திருப்பது மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பப்பாளி, நார்த்தங்காய், கொய்யா, மாதுளை ஆகியவற்றில் பாதுகாப்பு அளவை விட அதிகமான குரோமியம் நச்சுக் கலப்பு இருப்பது தெரிகிறது.
அதிலிருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரம்: பழம்,காய்கறிகள் குரோமியம் நச்சு அளவு (மில்லி கிராமில்)
சப்போட்டா 0.40
கருவேப்பிலை 2.03
மாம்பழம் 11.71
தேங்காய் 17.85
கொய்யா 26.82
நார்த்தங்காய் 34.44
மாதுளை 20.49
துளசி 10.08
முருங்கைக் காய் 17.52
கரும்பு 1.98
வாழைப்பழம் 0.60
புளிச்சக்கீரை 4.47
பப்பாளி 52.36
கத்தரிக்காய் 10.18
சிவப்பு மிளகாய் 1.50
தக்காளி 0.80
வெண்டைக்காய் 11.93