முகப்பு
சென்னை

திறந்தவெளியில் வெளியேற்றப்படும் கழிவுகள்: சுகாதாரச் சீர்கேட்டால் பொது மக்கள் அச்சம்

சென்னை மாதவரம் பகுதியான கதிர்வேடு கே.வி.ஆர்.நகர், திருமால் ஸ்ரீநிவாச நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் திறந்தவெளியில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:41 AM
பகிர்:

சென்னை மாதவரம் பகுதியான கதிர்வேடு கே.வி.ஆர்.நகர், திருமால் ஸ்ரீநிவாச நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் திறந்தவெளியில் விடப்படுவதால், பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
 இந்தப் பகுதிகளில் இதுவரை கழிநீர் கால்வாய் அமைக்கப்படாததும், புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளதாதுமே இந்தச் சீர்கேட்டுக்கு காரணம் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதியில் மாதவரம் மண்டலத்துக்குக் கீழ் இணைந்திருக்கும் பகுதி கதிர்வேடு. இந்தப் பகுதியில் கே.வி.ஆர். நகர், திருமால் ஸ்ரீவாச நகர், பாலாஜி நகர் என 10-க்கும் மேற்பட்ட நகர்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
 கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது, இந்தப் பகுதியும் மாதவரம் மண்டலத்தின் கீழ் வந்தது.
 அவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட சென்னையில் இணைக்கப்பட்டு இதுவரை 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்தப் பகுதிகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்போ, கழிவுநீர் இணைப்போ கொடுக்கப்படவில்லை.
 இப்போதுதான் இதற்கான ஆயத்தப் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
 இதனால், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அனைவரும், வீட்டுக் கழிவுகளை கீழ்நிலைத் தொட்டிகளில் சேகரித்து, பின்னர் கழிவுநீர் அகற்றும் லாரிகள் அப்புறப்படுத்தும் நிலையே நீடித்து வருகிறது.
 இந்த நிலையில் பல குடியிருப்புவாசிகள் கூடுதல் செலவினம் காரணமாக, இந்தக் கழிவுநீரை லாரிகள் மூலம் பாதுகாப்பாக அகற்றுவதைத் தவிர்த்து, அருகிலுள்ள திறந்தவெளி நிலங்களில் குழாய்கள் மூலம் விடுவதையே வாடிக்கையாக கொண்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
 இதுகுறித்து கே.வி.ஆர். நகரில் கடநத 4 ஆண்டுகளாக வசித்து வரும் வசந்த், சம்பத், காமாட்சி ஆகியோர் கூறியது:
 இந்தப் பகுதியில் கழிவுநீர் இணைப்பு இல்லாததால், 3 மாதம் அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை லாரிகள் மூலம் கழிவுநீரை அகற்றவேண்டிய நிலை உள்ளது.
 ஒரு முறை லாரி மூலம் அகற்ற ரூ. 1,300 வரை செலவாவதால், பல குடியிருப்புவாசிகள் அந்தப் பகுதிகளில் உள்ள தனியார் நிலங்களிலேயே கழிவுநீரை வெளியேற்றுகின்றனர்.
 கே.வி.ஆர். நகர் பகுதியில் மட்டும் தனியாருக்குச் சொந்தமான 7 மனைகள் உள்ளன. இந்த மனைகளில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும். இதை பயன்படுத்திக் கொண்டு, அங்குள்ள குடியிருப்புவாசிகள் வெளிப்படியாக குழாய்களை பதித்து அதன் மூலம் அந்த மனைகளில் கழிவுநீரை விடுகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும், ஈக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது.
 இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக பெய்த பலத்த மழை காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. அப்போது, இந்த கழிவுநீர் கலந்த மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்தது.
 இதனால், அந்தப் பகுதி மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயமும் இப்போது எழுந்துள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
"கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'
 திறந்தவெளியில் கழிவுநீரைத் தனி இணைப்பு கொடுத்து விடுவது தவறான விஷயம். அது தண்டனைக்குரியது. இதுபோன்று செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் தெரிவித்தார்.
 மாதவரம் பகுதிகளில் தனியார் லாரிகள் வீடுதோறும் சென்று கழிவுநீரை அகற்றுகின்றனர். இதுபோல 500 லாரிகள் இந்தப் பணியை கட்டணத்துக்காக செய்து வருகின்றனர். இந்தத் தனியார் லாரிகள் சேகரிக்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேற்றுவதற்கு, கழிவுநீர் அகற்றும் பம்ப்பிங் மையத்தில் நாங்கள் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்றார் அவர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments