சென்னை

இன்னும் தீரல...விருகம்பாக்கம் நலவாழ்வு மையம் முழுநேர மருத்துவமனையாக மேம்படுத்தப்படுமா?

எ.கோபி

சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் 5-ஆவது பிரதான சாலையில் நலவாழ்வு மையம் செயல்படுகிறது. அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்காக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் சார்பில் ரூ.40 லட்சத்தில் இந்த நலவாழ்வு மையம் 1992-இல் தொடங்கப்பட்டது.

அவசர சிகிச்சைப் பிரிவு இல்லை: காலை 10 மணி முதல் 2 மணி வரை புறநோயாளிகளுக்கு பகுதி நேர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல், பிரசவத்துக்கு முன்பும், அதன் பின்பும் மருத்துவம் பார்க்கப்படுகிறதே தவிர, பிரசவத்துக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

மேலும், விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் பார்க்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளிட்டவை இல்லை. இந்நிலையில், மருத்துவமனையாக மேம்படுத்தப்பட அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் பகுதியினர் கூறியதாவது:

விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட இளங்கோ நகர், சாய்நகர், கோயம்பேடு அங்காடி, சாலிகிராமம் உள்ளிட்ட பகுதியினர் பல ஆண்டுகளாக முழு நேர மருத்துவமனை தேவையெனக் கோரி வந்தோம். இதையடுத்து நடேசன் நகரில் பகுதி நேரம் மட்டுமே செயல்படும் நல வாழ்வு மையம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர். போதிய வசதியின்றி இருப்பதால் உயர் மருத்துவ சிகிச்சை, அவசர கால சிகிச்சைக்கு சிரமப்படும் நிலை உள்ளது. பகுதி நேரம் மட்டுமே நலவாழ்வு மையம் செயல்படுவதால், அதனை முழு நேர மருத்துவமனையாக மேம்படுத்தி தரக் கோரி மாநகராட்சியிடம் பல முறை விண்ணப்பித்துள்ளோம். ஆனால், இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், ""வடபழனியில் உள்ள மகப்பேறு மையத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்; இதை மேம்படுத்த வாய்ப்பில்லை'' என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நல வாழ்வு மையத்தில் போதிய இடவசதி இருந்தும், முழுநேர மருத்துவமனையாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், 100 படுக்கை வசதியுடன் சிகிச்சை அளிக்கக்கூடிய அளவுக்கு இடம் உள்ளது. மேலும், பல்வேறு நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ வசதி, சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், விருகம்பாக்கம் நல வாழ்வு மையத்தை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்படுத்தக் கோரி வருகிறோம். மாநகராட்சி சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இந்தத் தேர்தலில் முழுநேர மருத்துவமனை அமைத்துத் தர உறுதியளிப்போருக்கே வாக்களிப்போம் என்றனர்.

-எ.கோபி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரப்பெற்றோம் (17-06-2024)

ரேபரேலியா? வயநாடா? கார்கே இல்லத்தில் ஆலோசனை!

ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

'கல்கி 2898 ஏடி' முதல் பாடல் வெளியானது!

அமித் ஷாவை நேரில் சந்தித்த கௌதம் கம்பீர்; காரணம் என்ன?

SCROLL FOR NEXT