கால்வாய்கள் உண்டு; நீர் வெளியேற வழியில்லையே...!
சென்னை மாநகர எல்லைக்குள் கால்வாய்கள் நிறைய உள்ளன. ஆனால், கனமழை பெய்தால் வெள்ளநீர் வெளியேற முடியாத நிலையில் பெரும்பாலான இடங்களில் அடைபட்டு கிடக்கின்றன.
சென்னைகால்வாய்கள் உண்டு; நீர் வெளியேற வழியில்லையே...!
சென்னை மாநகர எல்லைக்குள் கால்வாய்கள் நிறைய உள்ளன. ஆனால், கனமழை பெய்தால் வெள்ளநீர் வெளியேற முடியாத நிலையில் பெரும்பாலான இடங்களில் அடைபட்டு கிடக்கின்றன.
சென்னை மாநகர எல்லைக்குள் கால்வாய்கள் நிறைய உள்ளன. ஆனால், கனமழை பெய்தால் வெள்ளநீர் வெளியேற முடியாத நிலையில் பெரும்பாலான இடங்களில் அடைபட்டு கிடக்கின்றன.
சென்னையிலுள்ள முக்கிய வடிகால் வசதி கால்வாய்கள், நான்கு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வடக்குத் தொகுப்பில் கொளத்தூர், கேப்டன் காட்டன், ஓட்டேரி நுல்லா ஆகியனவும், மத்திய தொகுப்பில் மாம்பலம், நந்தனம், கூவம், விருகம்பாக்கம், அரும்பாக்கம் ஆகியனவும், கிழக்கில் ராயபுரம், வடக்கு பக்கிங்காம், சென்ட்ரல் பக்கிங்காம், தெற்கு கால்வாய் ஆகியனவும், தெற்கில் அடையாறு, வேளச்சேரி நீராதாரத் தொகுப்பு ஆகியனவும் அடங்கியுள்ளன.
இந்தக் கால்வாய்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 1,860 கி.மீ. நீளத்துக்கு தூர்வாரும் பணி நடைபெற்றதில், சுமார் 6,200 மெட்ரிக் டன் அளவுக்கு கழிவு மண் வெளியேற்றப்பட்டது.
அடைந்து கிடக்கும் கால்வாய்கள்: இந்த நிலையில், தூர்வாரும் பணி நடைபெற்றிருந்தாலும், முக்கிய கால்வாய்களும், இணைப்புக் கால்வாய்களும் கோரைப் புற்கள், ஆகாயத் தாமரைகளால் அடைத்துக் கிடக்கின்றன.
வட சென்னையின் முக்கிய கால்வாயான கேப்டன் காட்டன் கால்வாயில் எம்.கே.பி. நகர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கு ஏற்பட்டுள்ள திட்டுகள் நீரோட்டத்தை தடுத்து நிறுத்துகின்றன. இதேபோல், வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி வழியே செல்லும் இணைப்புக் கால்வாயின் போக்கே தெரியாத வகையில் புதர் மண்டி கிடக்கிறது.
பக்கிங்காம் கால்வாய் அண்மையில்தான் தூர்வாரப்பட்டிருந்தாலும், எண்ணூர் முதல் சென்ட்ரல் வரை ஆங்காங்கு ஏராளமான இடங்களில் கால்வாயில் தடுப்புகள் ஏற்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் கழிவுகளே முக்கிய காரணம்: கால்வாய்களின் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாக்கெட்டுகள், பைகள் அடைத்துகொண்டு மிதக்கின்றன. இணைப்புக் கால்வாய்களில் பொதுமக்களால் தூக்கியெறியப்படும் இந்த வகை பிளாஸ்டிக் கழிவுகள் பிரதான கால்வாய்களுக்கு சிறிது சிறிதாக வந்து சேர்கின்றன. இதற்கிடையில் ஆங்காங்கு வளர்ந்துள்ள கோரைப்புற்கள், ஆகாயத் தாமரைகளால் தடுக்கப்பட்டு படிப்படியாக திட்டுக்களாக மாறுகின்றன. பங்கிங்காம் கால்வாயில் சென்ட்ரல் அருகே மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் சாணங்கள், குப்பை, கூழங்களால் அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும் சில இடங்களில் சிறிய வகை மரங்கள், சீமைக் கருவேல் மரங்கள் ஆகியனவும் அடைத்துள்ளன.
திருவொற்றியூர் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் ஆயில் கழிவுகள் கனமழையின்போது பக்கிங்காம் கால்வாயில் புகுந்து கால்வாயில் படிகின்றன. இதனால் ஆற்றின் கொள்ளளவு பாதிக்கப்பட்டு மழைக்காலங்களில் நீரோட்டத்தின் வேகத்தில் தடை ஏற்பட்டு கரையில் உடைப்புகள் ஏற்படுகின்றன.
போர்க்கால நடவடிக்கை தேவை: இதுகுறித்து நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகி என்.துரைராஜ், திருவொற்றியூர் சமூக சேவை சங்க நிர்வாகி கே.சுப்பிரமணி உள்ளிட்டோர் கூறியது:-
2015 டிசம்பரில் பெய்த கனமழையால் சென்னை மாநகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் இருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அப்போது, எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியதோ அதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். கால்வாய் அடைப்புகளை நீக்க வேண்டும். ஆண்டு முழுவதும் தொடர் பராமரிப்பில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு கால்வாய்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தின ஊதிய அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தினசரி வேலைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.
இவர்களை பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள கால்வாய்களைக் கண்காணிக்க அறிவுறுத்தலாம். சிறிய அளவில் புற்கள் வளரும்போதோ அல்லது பிளாஸ்டிக் கழிவுகள் வந்தாலோ அவற்றை உடனடியாக அகற்றி விட்டால் பிறகு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து தூர்வாரும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. இந்தப் பிரச்னையில் போர்க்கால அடிப்படியில் செயல்பட்டால், அக்டோபரில் தொடங்கும் வட கிழக்குப் பருவமழையால் சென்னைக்கு அச்சுறுத்தல் இருக்காது என்றனர்.