முகப்பு
சென்னை

சொந்த நாடுகளுக்கு திரும்பின பறவைகள்: இன்றுடன் வேடந்தாங்கல் சரணாலயம் மூடல்

சீசன் முடிந்த காரணத்தால் வேடந்தாங்கலுக்கு இனப் பெருக்கத்துக்காக வந்த பறவைகள் சொந்த நாடுகளுக்கு திரும்பின.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:34 PM
பகிர்:

சீசன் முடிந்த காரணத்தால் வேடந்தாங்கலுக்கு இனப் பெருக்கத்துக்காக வந்த பறவைகள் சொந்த நாடுகளுக்கு திரும்பின. இதனையடுத்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்படுவதாக தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 தமிழகத்தின் முக்கிய பறவைகள் சரணாலயங்களுள் ஒன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். பல்வேறு நாடுகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான மைல்களை தாண்டி வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள், குறிப்பிட்ட காலம் வரை இங்கு இருக்கும். முட்டையிட்டு குஞ்சு பொரித்து, தனது வம்சத்தைப் பெருக்க வெளிநாட்டு விருந்தினர்களாக பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றன.
 ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூர், வங்கதேசம், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்து வக்கா, நாரை, மஞ்சள் நாரை, முக்குளிப்பான், கிவி, நாமக்கோழி, சாம்பல் கூழைக்கடா, நத்திக்கொத்தி நாரை, பாம்புதாரா, ஊசிவால் வாத்து, கரண்டிவாயன், வெள்ளைநிற அரிவாள்மூக்கன், வர்ணநாரை, நீர்காகம் போன்ற பல்வேறு வகையான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றன.
 ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசனாகும். வேடந்தாங்கல் ஏரியில் உள்ள கடம்ப, கருவேல மரங்களில், இப்பறவைகள் கூடு கட்டி, தங்கி செல்லும்.
 1.60 லட்சம் பார்வையாளர்கள்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி, வேடந்தாங்கல் சரணாலயம் சீசனுக்காக திறக்கப்பட்டது. அதிலிருந்து நிகழாண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி வரை வேடந்தாங்கலுக்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 88 பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். இதில், பெரியவர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 312 பேரும், குழந்தைகள் 44,776 பேரும் வேடந்தாங்கல் சரணாலயத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
 33,895 பறவைகள்: நிகழாண்டு வேடந்தாங்கலுக்கு 33,895 பறவைகள் வருகை புரிந்துள்ளன. இவை 8 ஆயிரம் குஞ்சுகளைப் பொறித்துள்ளன. இதன்படி, குஞ்சுகளுடன் சேர்த்து மொத்தம் 82,641 பறவைகள் சொந்த ஊர்களுக்கும், நாடுகளுக்கும் இப்போது
 திரும்பியுள்ளன.
 இதற்கு முன் அதிகபட்சமாக 2013-14-ஆம் ஆண்டு சீசனில் 32 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. பின்னர், 2014-15-ஆம் ஆண்டு மழை பொய்த்ததால் வேடந்தாங்கல் ஏரி வற்றிப்போனது. இதனால், 1,531 பறவைகளே வந்து தங்கின.
 இது குறித்து வனச்சரகர் சிவகுமார் கூறியது:
 பறவைகள் முட்டையிட்டு குஞ்சுப் பொரித்து வளர்ந்த பின், இப்போது தங்களது ஊர்களுக்கும் நாடுகளுக்கும் திரும்பி சென்றுவிட்டன. எனவே, வேடந்தாங்கல் சரணாலயம் ஜூன் 27-ஆம் தேதி முதல் மூடப்படுகிறது. 2016 - 2017 ஆம் ஆண்டுக்கான சீசன், மழை பெய்த பின் மீண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கும். அதுவரை சரணாலயத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments