ரயில்வே அவசரகால ஒதுக்கீட்டில் கடும் கட்டுப்பாடுகள்: அதிருப்தியில் ரயில்வே ஊழியர்கள்
அவசரகால ஒதுக்கீட்டில் (எமர்ஜென்சி கோட்டா) கடுமையான கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. இதனால், இருக்கை பெற விண்ணப்பிக்கும் ரயில்வே
அவசரகால ஒதுக்கீட்டில் (எமர்ஜென்சி கோட்டா) கடுமையான கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. இதனால், இருக்கை பெற விண்ணப்பிக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு முன்னுரிமை மறுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கூட்ட நெரிசல் காரணமாக, ரயில்களில் பயணிக்க முன்பதிவு மூலம் பயணச் சீட்டு பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும்தான் உறுதி செய்யப்பட்ட பயணச் சீட்டு கிடைக்கும் நிலை உள்ளது. ஆனால், அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் எந்த நேரமும் பயணம் செய்ய வசதியாக அவசரகால ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பொதுமக்களுக்கு முன்னுரிமை: பொதுமக்கள் 2 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு பயணச் சீட்டு பெற்று பயணம் செய்வது இயலாததாகும். இதையடுத்து, சாமானிய மக்களும் அவசரகால ஒதுக்கீட்டைப் பயன்படுத்தக் கூடிய வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்ப்பிணிகள், கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அவசரமாகப் பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள், போட்டித் தேர்வில் பங்கேற்கச் செல்வோர், வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்குச் செல்லக் கூடியவர்கள் தாங்கள் அவசரமாகப் பயணிக்க வேண்டியதன் காரணத்தையும், அதற்கான சான்றிதழையும் இணைத்து அந்தந்த ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில்வே வணிகப் பிரிவில் விண்ணப்பத்தை நிறைவு செய்து அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பரசீலித்து, சாமானிய மக்களும் அவசரகால ஒதுக்கீட்டில் ரயில்களில் பயணிக்க இடம் அளிக்கப்படும்.
கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, இதுவரை 1.50 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதன் காரணமாக, ரயில்வே ஊழியர்களுக்கு போதிய முன்னுரிமை அவசரகால ஒதுக்கீட்டில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரயில்வே ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ரயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:-
எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென காலமாவிட்டார். எனவே, உடனடியாக சொந்த ஊருக்கு நானும், எனது மனைவியும் செல்ல வேண்டிய கட்டாயம். தத்கல் நேரமும் முடிந்துவிட்டது. இதையடுத்து, முன்பதிவு செய்த பயணச்சீட்டுடன் அவசரகால ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்தோம். ஆனால், முன்னுரிமை வழங்கப்படவில்லை. அவசரகால ஒதுக்கீட்டில் இப்போது என்ன நடக்கிறது என்றார்.
இதேபோல், பல ஊழியர்களின் அவசரகால ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் வர்த்தகப் பிரிவு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
சாமானிய மக்கள் முக்கியமான நேரங்களில் நேரடியாகத் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். கர்ப்பிணிகள், முதியோர்கள், மருத்துவ மற்றும் கல்வி தொடர்பான பயணங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆனால், பயணச் சீட்டுகளை விற்கும் முகவர்களிடம் பயணச் சீட்டு எடுத்தால் அவசரகால ஒதுக்கீட்டில் இடம் வழங்க இயலாது. சாமானிய மக்கள் அவசர கால ஒதுக்கீடு சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றனர்.