சென்னை

முதல்முறையாக நெரிசலின்றி பயணம்!

DIN

தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு முதல் முறையாக நெரிசலின்றி சென்றதாக அரசுப் பேருந்துகளில் பயணித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் தங்கியுள்ள வெளியூர் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வியாழக்கிழமை காலை முதலே கோயம்பேடு பிரதான பேருந்து நிலையத்துக்கு வரத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மேல் பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
கோயம்பேடில் நெரிசல் இல்லை!
இந்த நிலையில் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில், கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணையம் அருகில், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய 4 இடங்களிலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பிரதான பேருந்து நிலையத்தின் வெளிப்புறம், உள்புறம், நுழைவாயில் என எந்தப் பகுதியிலும் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை.
அந்தந்த நடைமேடைகளில் பொதுமக்களின் வருகையைக் கணக்கிட்டு கோயம்பேடு சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு சிறப்புப் பேருந்துகள் பிரதான பேருந்து நிலையத்துக்குள் வந்து பயணிகள் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணம் செய்தனர்.
இதுகுறித்து சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற கல்லூரி மாணவி தீபா, திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் சண்முகம், கன்னியாகுமரியைச் சேர்ந்த சரோஜா உள்ளிட்டோர் கூறியது:-
கடந்த ஆண்டுகளில் சொந்த ஊர்களுக்குச் செல்லும்போது கூட்ட நெரிசல் உள்பட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எந்த நடைமேடையில் பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழியும். பேருந்துகளும் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்திச் சென்றோம்.
அறிவித்தாறே பேருந்துகள் இயக்கம்: இந்த ஆண்டு தாற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததால், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்தது. அதேபோன்று முன்பதிவு செய்யாதவர்கள் பயணம் செய்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 7,8,9 ஆகிய நடைமேடைகளில் இருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இரவு சரியாக 7.15 மணிக்கு பேருந்து கிளம்பும் என ஒலிபெருக்கியில் அறிவித்தவாறே அதே நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இடர்பாடுகள் இல்லாததால் மகிழ்ச்சியே: விசாரணை மையத்தில் உள்ள அதிகாரிகள் பயணிகளின் தேவையறிந்து சரியான வழிகாட்டுதல்களை வழங்கினர். எல்லாவற்றுக்கும் மேலாக ஆம்னி பேருந்துகளுடன் ஒப்பிடுகையில் அரசுப் பேருந்து கட்டணம் மிகவும் குறைவு. கோயம்பேட்டிலிருந்து முறையாக எந்தவித இடர்பாடுகளுக்கும் ஆளாகாமல் பயணம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

ஆம்னி பேருந்துகளில் தொடரும் வசூல்!
பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு புகார் தெரிவிக்க சில தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், எச்சரிக்கை பெயரளவுக்கே இருந்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
கோயம்பேடு சந்தை அருகே ஆம்னி பேருந்து நிலையத்துக்கு வெளியே ஏராளமான இடைத்தரகர்கள் முன்னணி ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பெயரைச் சொல்லி அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
சென்னையிலிருந்து சேலத்துக்குச் செல்லும் செமி-ஸ்லீப்பர் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.950 முதல் ரூ.1,350 வரையிலும், மதுரை செல்வதற்கு ரூ.800 முதல் ரூ.1,150 வரையிலும் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
சேலத்துக்குச் செல்ல ரூ.660 என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.1,200-ஐ தரகர்கள் வசூலித்து விட்டனர். இதே பயணச் சீட்டின் விலை மேலும் ரூ.300 அதிகரிக்கும் என்று கூறிவிட்டனர். மேலும் தங்களுக்கு தரகு கூலியாக ரூ.100 வற்புறுத்தி பெற்றுகொண்டனர். பண்டிகை கொண்டாட்டத்தில் இருக்கும் நாங்கள், தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட்ட விரும்பவில்லை. இதனால் கூடுதல் கட்டணத்தை செலுத்தியே பயணத்தை தொடர்ந்தோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT