திருவொற்றியூரில் 3 மாதங்களாகச் செயல்படாத எரிவாயு தகன மேடை
சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக செயல்படாத நிலையில் உள்ளது.
சென்னைதிருவொற்றியூரில் 3 மாதங்களாகச் செயல்படாத எரிவாயு தகன மேடை
சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக செயல்படாத நிலையில் உள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் திறந்த வெளியில் சடலங்கள் எரிக்கப்படும் அவலம் தொடர்கிறது.
நகரத்தார் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளது திருவொற்றியூர். இங்குள்ள மயானம் ரூ.1.10 கோடி செலவில் எரிவாயு தகன மேடை, அமரர் பூங்கா, இறுதிச் சடங்கு மண்டபம், எரிவாயு தகன மேடை ஆகிய வசதிகள் நிறைந்த நவீன மயானமாக கட்டமைக்கப்பட்டு கடந்த 2011 பிப். 27}இல் அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி திறந்து வைத்தார்.
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) சார்பில் ரூ.9.50 லட்சம் செலவில் அமரர் ஊர்தி ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது. எரிவாயு தகன மேடையை இயக்கும் பொறுப்பு பட்டினத்தார் சமூக சேவை மையத்திடம் அளிக்கப்பட்டது. மேலும் இதற்கு மயான ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் திறப்பு விழாவிற்குப் பிறகும் எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வரவில்லை. பின்னர் அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு மயான ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
மீண்டும் மீண்டும் பழுது: கடந்த 2013 டிசம்பரில் எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. சடலங்களை எரிப்பதற்கான அனைத்துச் செலவினங்களையும் மாநகராட்சி நிர்வாகமே ஏற்கும் என சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சைதை எஸ்.துரைசாமி அறிவித்தார். ஆனாலும், அடுத்த சில மாதங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் தகன மேடை மூடப்பட்டது.
மதுரை ஒப்பந்ததாரர் மூலம் மீண்டும் பழுது நீக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக தகனமேடை இயங்கி வந்தது. சில நேரங்களில் தடங்கல்கள் ஏற்பட்டாலும் ஒரு நாளைக்கு சுமார் 6 சடலங்கள்வரை எரியூட்டப்பட்டன. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக எரிவாயு தகன மேடை முற்றிலுமாகச் செயலிழந்தது.
சடலம் எரிக்க ரூ. 15 ஆயிரம்... இதனையடுத்து தினமும் பழைய முறையிலேயே சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. பழைய எரிமேடையிலேயே விறகு, சாண வறட்டி போன்றவற்றைக் கொண்டு சடலங்கள் எரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சடலங்கள் எரியூட்டப்படும்போது பரவும் துர்நாற்றத்துடன் கூடிய புகையால் இப்பகுதி மக்கள் மீண்டும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒரு சடலத்தை எரிக்க கூலி மற்றும் எரிபொருளுக்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை மயான ஊழியர்களால் வசூலிக்கப்படுவதாகவும், ஏழைக் குடும்பங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சடலங்கள் புதைக்கப்படும் இடமும் புதர்கள் மண்டிப்போய் எவ்வித பராமரிப்பும் இன்றி சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சமாதிகள் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகவே மாறிவிட்டன. நீண்ட நாள்களாக இருந்து வரும் இச்சீர்கேடுகள் குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
புகைபோக்கி அமைக்கும் பணிதான் பாக்கி: இது குறித்து மாநகராட்சி மண்டல அலுவலர் முகம்மது பாட்சா கூறியது:
பழுதடைந்த எரிவாயு தகனமேடை ரூ. 9 லட்சம் செலவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய புகைபோக்கி (சிம்னி) அமைக்க வேண்டியுள்ளது. இரண்டு பணிகளுமே தனித்தனி ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார் பாட்சா.
மனிதனின் இறுதிப் பயணமாவது தடங்கலின்றி, சுமையின்றி நடைபெற மாநகராட்சிதான் மனது வைக்க வேண்டும். மீண்டும் திறக்கப்பட்டாலும், அதன் பிறகாவது திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை தடையின்றிச் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோள்.