சென்னை

இடிந்து விழும் நிலையில் வேளச்சேரி மீன் மார்க்கெட் கட்டடம்

DIN

வேளச்சேரி பகுதியிலுள்ள மீன் மார்க்கெட் கட்டடம் அடிப்படை வசதிகளின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மீன் வியாபாரிகள் அச்சத்துடன் கடை நடத்துகின்றனர். நுகர்வோரும் தினமும் இங்கு அச்சத்துடனே வந்து செல்கின்றனர்.
மாநகராட்சி கட்டடம்: பெருநகர சென்னை மாநகராட்சி 13 -ஆவது மண்டலம், 179 வார்டு வேளச்சேரி, காந்தி சாலை, ராஜா தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. 12 கடைகளைக் கொண்ட இந்த மீன் மார்க்கெட் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் பெண்கள் மட்டுமே மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இக்கட்டடம் முறையான பராமரிப்பு இல்லாமல் போனதை அடுத்து மிகுந்த சேதமடைந்துள்ளது. மேலும் இங்கு வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் போதுமான குடிநீர் வசதி, மின் விளக்கு, கழிவறை வசதி உள்ளிட்டவை இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் பல எரிவதில்லை. இதனால் வியாபாரிகள் நடைபாதையில்தான் கடைகளை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நுகர்வோர் வந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
பெயர்ந்து விழும் சிமெண்ட் காரை: கட்டடத்தின் மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் வியாபாரிகள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். எந்நேரமும் கட்டடம் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கிரீன்வாய்ஸ் சமூக நல அமைப்பின் இயக்குநர் எஸ்.ராகவன் கூறியது: அடிப்படை வசதிகளின்றி, மிகவும் மோசமான நிலையில் காணப்படும் இந்த மீன் மார்க்கெட் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அதே சீரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கட்டடம் இடிந்து ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார் அவர்.
சீரமைக்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு: இதுகுறித்து, 13 -ஆவது மண்டல உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன் கூறும்போது , ' ராஜா தெரு மீன்மார்க்கெட்டின் ஒருபகுதியில் ரேஷன் கடை அமைக்க கடந்தாண்டு திட்டமிடப்பட்டது. பின்னர், ரேஷன் கடை வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 
இதனால், மீன் மார்க்கெட்டை சீரமைப்பு செய்வதில் தொய்வு ஏற்பட்டு விட்டது. தற்போது அதை சீரமைக்க ரூ.5 லட்சத்துக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT