வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கல்: காவல் உதவி ஆய்வாளர் கைது
சென்னை ராயபுரத்தில் உள்ள தனது வீட்டில் 22 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
சென்னைவீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கல்: காவல் உதவி ஆய்வாளர் கைது
சென்னை ராயபுரத்தில் உள்ள தனது வீட்டில் 22 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள தனது வீட்டில் 22 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
சென்னை ராயபுரம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சுந்தரவடிவேலு (51). இவர், கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது லஞ்ச புகார் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன.
இந்நிலையில், சுந்தரவடிவேலுவின் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, பூக்கடை காவல் துணை ஆணையர் எஸ்.செல்வக்குமாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், சுந்தரவடிவேலுவின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு உடனடியாக ஒரு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து செல்வக்குமார் உத்தரவிட்டார்.
இந்தத் தனிப்படையினர், சுந்தரவடிவேலுவின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில், 22 கிலோ கஞ்சா ஒரு பையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணைக்காக, சுந்தரவடிவேலுவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் துணை ஆணையர் செல்வக்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் சுந்தரவடிவேலு, கஞ்சா வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் வாங்கி வருவதும், கஞ்சா வியாபாரிகளிடம் போலீஸார் நடத்தும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல், தன்னிடம் தொடர்பில் உள்ள வியாபாரிகளிடம் மீண்டும் விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இந்நிலையில், கோட்டை அருகே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவை, சுந்தரவடிவேலு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையிலேயே துணை ஆணையர் செல்வக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர், சுந்தரவடிவேலுவை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். சென்னையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.