எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் கழிவுநீரை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வுத் திட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளிலிருந்து சாக்கடைக் கழிவை வெளியேற்றுவதில் அதிகாரிகள் மெத்தனத்துடன் செயல்பட்டு வருவதால் அடிக்கடி சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்தும்
சென்னைஎர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் கழிவுநீரை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வுத் திட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளிலிருந்து சாக்கடைக் கழிவை வெளியேற்றுவதில் அதிகாரிகள் மெத்தனத்துடன் செயல்பட்டு வருவதால் அடிக்கடி சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்தும்
எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வுத் திட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளிலிருந்து சாக்கடைக் கழிவை வெளியேற்றுவதில் அதிகாரிகள் மெத்தனத்துடன் செயல்பட்டு வருவதால் அடிக்கடி சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்தும் ஓடும் அவல நிலை நீடிக்கிறது.
வடசென்னை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் மறுவாழ்வு குடியமர்த்தல் மற்றும் சாலை விரிவாக்கத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு மறுகுடியமர்த்தல் திட்டத்தின் கீழ் எர்ணாவூரில் முதலில் சுமார் 3500 வீடுகள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெளியேற்றப்படும் மக்களுக்கும் இங்கு வீடுகள் கட்டப்பட்டன. தற்போது சுமார் 7,500 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தற்போது சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
பொதுமக்கள் போராட்டம்: இப்பகுதியில் பாதாளச் சாக்கடை இணைப்பு இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் அகற்றப்பட்டன. ஆனால் கழிவுநீரின் அளவு அதிகமாக இருந்ததால் லாரிகள் மூலம் அகற்றுவது சிரமமாக இருந்து வந்தது. இக்கழிவு நீர் தெருக்களில் தேங்கியபோதெல்லாம் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் 18 நகராட்சி வார்டுகளில் அமைக்கப்பட்டு வந்தது. இதற்கென முக்கியக் குழாய்கள் சாலைகளில் பதிக்கப்பட்டன. வீடுகளுக்கும் இணைப்புகள் கொடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆனால் சுத்திகரிப்பு மையங்கள் செயல்பாட்டுக்கு வராததால் கழிவுநீரை பாதாளச் சாக்கடை மூலம் வெளியேற்ற முடியவில்லை.
பணி முடிக்கப்படாத குழாயில் கழிவு நீர் வெளியேற்றம்:
பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் கழிவு நீர் அகற்றல் வாரியம் சார்பில் ராமகிருஷ்ணா நகரிலிருந்து பாரத்நகர், ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் வழியாக பங்கிங்காம் கால்வாய்வரை பிரதானக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதற்கிடையே குடிசை மாற்று வாரியத் தொட்டிகளில் நிரம்பிய கழிவுநீரை மோட்டார் பம்புகள் மூலம், செயல்பாட்டுக்கு வராத இக்குழாய்களில் செலுத்தி எவ்வித சுத்திகரிப்பும் இன்றி பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. இதற்கென ஆங்காங்கே விசைப் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கழிவு நீர் வெளியேற்றப்படும்போது ஏதாவது ஒரு மோட்டார் பம்ப் செயல்படவில்லை, எதிர் அழுத்தம் ஏற்பட்டு ஆள் இறங்கும் குழிகள் வழியாக கழிவு நீர் ஊற்றுப் போல பீச்சியடிக்கிறது. சில நிமிடங்களில் சாலையில் கழிவு நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிறகு இது குறித்து தகவல் அறிந்தவுடன் வெளியேற்றும் மோட்டாரை நிறுத்துகின்றனர். இதனையடுத்து கழிவு நீர் வெளியேற்றப்படுவது நின்றுவிடும். இருப்பினும் கழிவுகளால் அப்பகுதியே அடுத்த சில நாள்களுக்கு துர்நாற்றம் வீசும் அவல நிலை உள்ளது.
இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை காலை பாரத்நகர் பகுதியில் கழிவு நீர் சுமார் 5 ஆளிறங்கும் குழிகள் வழியாக வெளியேறியது. சுமார் அரை மணி நேரம் வெளியேறிய கழிவு நீர் இப்பகுதியை அவலப்படுத்திவிட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
பொதுமக்களும் முகம்சுளித்தபடியே மூக்கைப் பிடித்துக்கொண்டு கடந்து சென்றனர். விசை மோட்டார்கள் இயக்கப்பட்டதையடுத்து கழிவு நீர் வெளியேறுவது நின்றது. ஆனால் ஏற்கனவே வெளியேறிய கழிவு நீர் மஞ்சள் நிறத்தில் தொடர்ந்து தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது.
பொதுமக்கள் அதிருப்தி
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டம் இன்னும் முடிந்தபாடில்லை. தற்போது கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மையத்தின் கட்டுமானப் பணிகள், இயந்திரங்கள் பொருத்தும் பணியும் நிறைவடையவில்லை.
அதுவரை குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் கழிவு நீரை குழாய்களில் வெளியேற்றுவதில் பொதுமக்கள் அவதிக்குள்ளாத வகையில் செயலாற்ற வேண்டும்.
கொட்டாங்குச்சியில் தண்ணீர் இருந்தாலே கொசு உற்பத்தியாகிவிடும் என பொதுமக்களை எச்சரிக்கும் அரசு அதிகாரிகள் இவ்வாறு தெருக்களில் தேங்கும் கழிவு நீருக்கு என்ன பதில் சொல்வார்கள் என்பதே என்பதே இப்பகுதி பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
அதிகாரிகள் மெத்தனம்
எவ்வித முறையான அனுமதியும் இன்றி கழிவு நீரை வெளியேற்றுவது குடிசைமாற்று வாரிய அதிகாரிகள்தான். கழிவுநீரை லாரிகள் மூலம் அகற்ற முடியாததால் இங்கு வசிக்கும் மக்களின் நலன் கருதி இவ்வாறு வெளியேற்றுவதாகக் கூறுகின்றனர்.
இது குறித்து சென்னை கழிவு நீர் அகற்றல் வாரிய அதிகாரிகள் கூறும்போது, இப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டம் கழிவு நீர் அகற்றல் வாரியத்தின் கட்டுமானப் பிரிவின் நிர்வாகத்தில் உள்ளது. முறையாக அனைத்து பணிகளும் முடிவடையாததால், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் பிரிவுக்கு இன்னும் ஒப்படைக்கவில்லை. செயல்பாட்டு வருவதற்கு முன்னால் குடிசை மாற்று வாரியம் கழிவு நீரை வெளியேற்றுவது முறையல்ல.
மேலும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திய பிறகுதானே மக்களை குடியமர்த்தி இருக்க வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்களின் பார்வையில் இரண்டு வாரிய அதிகாரிகளுமே அலட்சியத்துடன் நடந்து கொள்வதாகவே புகார் தெரிவிக்கின்றனர்.