வங்கிக் கடன் மோசடி: நால்வரின் தண்டனையை உறுதி செய்தது அமர்வு நீதிமன்றம்
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை சென்னை 6 -ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை சென்னை 6 -ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னையில் உள்ள ஒரு வங்கியில் முத்துசாமி, ஆனந்தன், அழகிரிசாமி, திவாகர் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.4 கோடி கடன் பெற்றனர். இதுகுறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சிபிஐ போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், முத்துசாமி உள்பட 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து முத்துசாமி உள்பட 4 பேரும் சென்னையில் உள்ள 6 -ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதி தனசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட முத்துசாமி உள்பட 4 பேருக்கும் கீழமை நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை உறுதி செய்து உத்தரவிட்டார்.