சென்னை

புத்தகங்கள் மனிதர்களை உன்னதமாக்கும்: நீதிபதி ஆர்.மகாதேவன்

DIN

புத்தகங்கள் தன்னை நேசிப்பவர்களை உன்னத மனிதர்களாக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 13 நாள்களாக நடைபெற்று வந்த 41-ஆவது புத்தகக் காட்சியின் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொண்டு பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தோருக்கு விருதுகள் வழங்கிப் பேசியது:
இலக்கியம் என்பது ஏதோ ஒரு மொழி சார்ந்த விஷயம் மட்டுமல்ல; மண், நாடு, மக்கள், கலாசாரம், மனதின் போக்குகள் என மனதின் வீரியம் சார்ந்த ஏராளமான விஷயங்கள் பலதரப்பட்ட மனிதர்களை அடையக்கூடிய விஷயங்களாக மாறும்போது அது மொழிகளைத் தாண்டி உலகத்தின் சிறந்த படைப்பாக மாறுகிறது; அது இலக்கியமாக அறியப்பட்டால் சிறந்த இலக்கியம் என பாராட்டப்படுகிறது. 
படைப்பாளிகளுக்கான அங்கீகாரம்: படைப்பாளிகள் அங்கீகாரங்களைத் தேடி எப்போதும் எழுதுவதில்லை. ஏனெனில் அங்கீகாரங்களைத் தாண்டி படைப்பு என்னும் அற்புதத்தை உள்ளக் கிடக்காகக் கொண்ட காரணத்தால் படைப்பாளி தனது படைப்புகளை எடுத்துத் தருகிறார். அத்துடன் அவரது பணி நிறைவடைகிறது. ஒரு படைப்பு சிறந்ததாக அறியக் கூடிய விதம் அந்தப் படைப்பு சார்ந்த விஷயமாக இருந்தாலும் கூட படைப்பாளிக்கு அது பரிசுகள், அங்கீகாரத்தைத் தேடித் தருகிறதா என்ற நிலை எந்தக் கால கட்டத்திலும் இருந்ததில்லை. 
உலகத்தின் உன்னதமான படைப்புகளைத் தந்த டால்ஸ்டாய், ஹெர்மன் மெல்வில் மற்றும் தமிழில் பல எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாக அறியப்பட்டதில்லை. இப்படிப்பட்ட சிறந்த படைப்பாளர்களின் எழுத்துகளைத் தேடியெடுத்து அவற்றை பதிப்பித்ததின் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்து படைப்பு என்னும் விந்தையை உணரச் செய்யக் கூடிய அற்புதமான பணிகளைச் செய்பவர்கள்தான் பதிப்பாளர்கள். அவர்களது பணி என்றைக்கும் போற்றத்தக்கது. 
புத்தகங்களை நேசிக்க வேண்டும்: 'எனக்கான வாழ்க்கை, எனக்கான சொர்க்கம் எதுவென்று கேட்டால் புத்தகங்கள் நிரம்பிய ஒரு அறைக்குள் என்னைத் தள்ளி என் வாழ்க்கையை அங்குதான் கழிக்க வேண்டும் என்று சொன்னால் உலகத்தில் சிறந்த சொர்க்கமாக அதைத்தான் கருதுவேன்' என்றார் ஜார்ஜ் லூயில் போர்ஹே. புத்தகங்கள் உடனான வாழ்க்கையும், புத்தகங்களை நேசிக்கக் கூடிய வாழ்க்கையும் மக்களை உன்னதமான மனிதர்களாக மாற்றிக் காட்டும் என்றார். 
விழாவில் பபாசி சார்பில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாண நூலகங்களுக்கு அளிப்பதற்காக பொது நூலகத்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகனிடம் நூல்கள் வழங்கப்பட்டன. 
இதில் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், பபாசி தலைவர் வயிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதிய பாடத் திட்டத்தில் அனைத்து திருக்குறள்களும் இடம் பெறும்
புத்தகக் காட்சியையொட்டி பேச்சு, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பரிசுகளை வழங்கிப் பேசியது: குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் பெற்றோர் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பத்தில் எத்தனை ஊடகங்கள் இருந்தாலும் மனதைப் புரட்டி அறிவைப் புகட்ட புத்தகங்களால் மட்டுமே முடியும். 
இளைய தலைமுறையை செம்மைப்படுத்த பாடத் திட்டத்தில் திருக்குறளை வைக்க வேண்டும்; அதில் இன்பத்துப்பாலைத் தவிர பிற பகுதிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டிருந்தார். 
வரும் கல்வியாண்டு வெளியாகும் புதிய பாடத் திட்டத்தில் 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பயிலும் மாணவர்களுக்கு அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றில் உள்ள அனைத்துக் குறள்களையும் சேர்க்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT