சென்னை

மழைக்கு முன்பு மணலி மாத்தூர் ஏரி தூர்வாரப்படுமா?

DIN

வடசென்னையில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான மணலி மாத்தூர் ஏரியை வரும் வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பே தூர்வார தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் 3 ஜே.சி.பி. இயந்திரங்களைப் பயன்படுத்தி ஏரியின் ஒரு பகுதியில் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

ஆக்கிரமிப்பில் சிக்கிய ஏரி: பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள மணலி மாத்தூர் ஏரி அரசு ஆவணங்களின்படி சுமார் 150 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. புழல் ஏரி கால்வாயின் மிக அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் தெற்குப் பகுதி மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம் வசம் உள்ளது. பழைமையான இந்த ஏரியின் தென்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட அரியவகை பறவையினங்கள் வசிக்கின்றன. ஏரியின் மொத்தப் பரப்பளவில் சுமார் 50 ஏக்கர் பகுதியை வீடுகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

மீதமுள்ள பகுதியில் வேலிக்காத்தான் மரங்களும், ஆகாயத் தாமரையும் பரவிக் கிடக்கின்றன. இந்நிலையில் ஏரியைத் தூர்வார வேண்டும். புழலேரி கால்வாய்-மாத்தூர் ஏரி இடையே உள்ள இணைப்புக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நான்கு புறமும் வலுவான கரைகளை அமைத்து ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும். கழிவுநீர் ஏரியில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

களமிறங்கிய பொதுமக்கள்: மணலி ஏரியை தூர்வாரும் திட்டத்தை பொதுப்பணித் துறை, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம் ஆகியன இதுவரை செயல்படுத்தாத நிலையில், ஏரியைத் தாங்களாகவே தூர்வாருவது என முடிவு செய்த பொதுநல அமைப்புகள் கடந்த ஒரு மாதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டன. இதற்கென மணலி மாத்தூர் ஏரி சீரமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தூர்வாரும் பணியில் பல்வேறு குடியிருப்போர் நல அமைப்புகள் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏரியில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு உதவியாக 3 ஜே.சி.பி. இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளும் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்களுக்கு தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

பணியில் தொய்வு: இருப்பினும் முறையான திட்டமிடல் இல்லாததால் நாள் முழுவதும் தூர்வாரும் பணியை மேற்கொண்டும் எவ்வித முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், மிகப் பெரிய இந்த ஏரியை ஆங்காங்கு ஆழப்படுத்துவதன் மூலம் ஏரியின் தன்மை மாறுபடலாம். அதனால் அரசு முறையான திட்டம் தயாரித்து முழுமையாக தூர்வாரி சீர்படுத்த வேண்டும் என்று தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்கள் கருத்து கூறினர்.

இதுகுறித்து ஏரி சீரமைப்புக் குழு நிர்வாகிகளில் ஒருவரான சிவில் முருகேசன் கூறியது:

கனரகத் தொழிற்சாலைகளின் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், ராட்சத மோட்டார்கள் மூலம் தொடர்ந்து உறிஞ்சப்படும் நீர் போன்றவற்றால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கழிவுநீர், ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ஆகியவற்றால் நிலத்தடி நீராதாரம் மாசு அடைந்துள்ளது. எனவே இப்பகுதியின் நீர்வளத்தைக் காக்கவும், இழந்த நீர்வளத்தை மீட்கவும் மணலி மாத்தூர் ஏரியை உடனடியாக தூர்வாருவது அவசியமாகிறது என்றார் முருகேசன்.

குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் திருஞானம், பாண்டியன் ஆகியோர் கூறியது:

ஏரியை தூர்வாரும் பணியில் பொதுமக்களை ஈடுபடுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதே எங்கள் நோக்கம். வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பு போர்க்கால அடிப்படையில் ஏரியைத் தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏரியின் தெற்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு முழுமையாக நான்கு புறமும் கரைகளை அமைக்க வேண்டும். புழல் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மணலி மாத்தூர் ஏரிக்கு வந்தடையும் வகையில் மதகுகளைக் கட்டமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்காலத்திலும்இப்பகுதியில் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படாமல் இருக்கும் என்றனர்.

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல ஏரிகளை தூர்வாரி செப்பனிடும் பணியை மேற்கொண்டுள்ள தமிழக அரசு நிர்வாகத்தின் கவனம் மணலி மாத்தூர் ஏரி பக்கம் திரும்பினால்தான் வரும் மழைக் காலத்தில் இப்பகுதி நிலத்தடி நீராதாரம் மேம்படும். அதன் மூலம் வரும் ஆண்டு கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இப்பகுதியில் ஏற்படாது என்கின்றனர் 
இப்பகுதி பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT