கடற்கரையில் கொட்டப்படும் மெட்ரோ ரயில் கட்டுமான கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம்
வடசென்னையில் வண்ணாரப்பேட்டை} திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவு மண் இப்பகுதி கடற்கரையில்
சென்னைகடற்கரையில் கொட்டப்படும் மெட்ரோ ரயில் கட்டுமான கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம்
வடசென்னையில் வண்ணாரப்பேட்டை} திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவு மண் இப்பகுதி கடற்கரையில்
வடசென்னையில் வண்ணாரப்பேட்டை} திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவு மண் இப்பகுதி கடற்கரையில் தொடர்ந்து கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுமார் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சுமார் 9 கி.மீ. நீளம் கொண்ட இத்திட்டத்தில் வண்ணாரப்பேட்டை}தண்டையார்பேட்டை இடையே சுமார் 2 கி.மீ. தூரம் பூமிக்கடியில் சுரங்கப் பாதையாகவும், தண்டையார்பேட்டை முதல் விம்கோ நகர் வரை சுமார் 7 கி.மீ. தூரம் உயர்மட்ட மேம்பாலத்திலும் செல்லும் வகையில் ரயில்பாதை அமைக்கப்படுகிறது.
இதில் பூமிக்கடியில் சுரங்கப் பாதை அமைக்கும்போது வெளியேற்றப்படும் கழிவு மண் ஓரளவு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டது. ஆனால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஏதுவாக தூண்கள் அமைக்கவும், ரயில் நிலையங்கள் கட்டுவதற்கும் அகற்றப்படும் மண்ணை வெளியே கொண்டு செல்வதில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
நெடுஞ்சாலை முழுவதும் மண் சிதறல்: தூண்கள் அமைக்க துளையிடும்போது மண் சரியாமல் இருக்க பென்டோனைட் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் வெளியேற்றப்படும் மண்ணுடன் இந்த ரசாயனக் கலவையும் கலந்தே வெளியேறுகிறது. முதலில் எர்ணாவூர் நெய்தல் நகர் பகுதியில் இந்த மண் மலைபோல் கொட்டப்பட்டு, பின்னர் அங்கிருந்து திருநீர்மலை பகுதிக்கு எடுத்துச் சென்று அங்குள்ள கல் குவாரி பள்ளங்களில் கொட்டுவதே செயல்திட்டம். இவ்வாறு கொண்டு செல்லும்போது லாரிகளிலிருந்து கொட்டும் மண் சிதறல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை முழுவதும் தேங்கியுள்ளது. இவற்றை அகற்றப் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பேருந்துகள் செல்லும்போது வெளியாகும் தூசி பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை நிலைகுலையச் செய்கிறது.
கடற்கரையில் கொட்டப்படும் ரசாயனக் கலவை: ரசாயனம் கலந்த இந்தக் கழிவு மண் பல நேரங்களில் திருவொற்றியூர் கடற்கரை நெடுகிலும் கொட்டப்படுகிறது. திருவொற்றியூரிலிருந்து திருநீர்மலைக்கு கொண்டு செல்வதற்கு வாடகை பெற்றுக் கொண்டு திருவொற்றியூர் பகுதியிலேயே இக்கழிவைக் கொட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தற்போது மழை பெய்து வரும் நிலையில், திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் கொட்டப்படும் ரசாயனக் கலவை நிலத்தடி நீராதாரத்தையும், சுற்றுச்சூழலையும் கண்டிப்பாகப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு பாதிப்பு: இதுகுறித்து திருவொற்றியூரைச் சேர்ந்த மண்ணியல் நிபுணர் கில்பர்ட் ராய் கூறியது:
சுரங்கப் பணிகளில் பயன்படுத்தப்படும் பென்டோனைட் ஒருவகை கனிம வகைதான். எனினும் இதில் உள்ள சில ரசாயனங்கள் மனிதர்கள், விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இவை கலந்த காற்றை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் கள அலுவலர் ஒருவர் கூறியது:
துளையிடும்போது அகற்றப்படும் பென்டோனைட் கலந்த கழிவு மண்ணை சேமிக்க திருநீர்மலை பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் கடற்கரையில் இக்கலவையைக் கொட்டியது யார் எனத் தெரியவில்லை. எனவே இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் குறுகலான சாலையில் மிகுந்த சிரமத்திற்கிடையேதான் ரயில்பாதை தூண்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.
கழிவுநீர் குழாய்கள், மின்கம்பிகள் உள்ளிட்டவை அதிக அளவில் குறுக்கிடுவதால் மாற்று வசதிகளை ஏற்படுத்திய பிறகே சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்கிறோம். எனவே இன்னும் 6 மாதம் பொதுமக்களுக்கு சிரமம் இருக்கும் என்றார் அவர்.
ஏற்கெனவே மணலியில் உள்ள ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் பல்வேறு கழிவுகளால் வடசென்னை கடற்கரை கடுமையாக மாசடைந்து வருகிறது. இந்நிலையில், பென்டோனைட் கலவையும் இப்பகுதியில் கொட்டப்படுவது மேலும் சுற்றுச்சூல் சீர்கேட்டை பாதிக்கும் என்பதால் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோள்.