சென்னை

3 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

DIN

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய 2017 (நவம்பர்-டிசம்பர்) பருவத் தேர்வில் 3 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூடத் தேர்ச்சி பெறவில்லை என்பதும் 29 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாதது, தரமான பேராசிரியர்கள் போதிய அளவில் இல்லாததுமே கல்லூரிகளின் இந்த நிலைக்குக் காரணம் என பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதற்கு முன்பாக, அனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிடுவது வழக்கம். 

பிளஸ் 2 முடித்து பொறியியல் கல்லூரிகளில் சேரப்போகும் மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்றும், முன்னாள் மாணவர்களிடம் விசாரித்தும் அந்தக் கல்லூரியின் தரம் குறித்து தெரிந்து கொள்வது போல, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் மூலமும் அந்தக் கல்லூரியின் தரத்தைத் தெரிந்து கொள்ள வசதியாக இந்தப் பட்டியலை பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

அதுபோன்று, 2017 நவம்பர்-டிசம்பர் மற்றும் 2017 ஏப்ரல்-மே பருவத் தேர்வுகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

இதில் நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்வில் பெரம்பலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள 3 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. அதுபோல 29 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் தேர்ச்சி ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது.

61 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவும், 82 கல்லூரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவும், 101 கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவாகவும், 77 பொறியியல் கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கும் குறைவாகவும், 61 பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உள்ளது.
ஏப்ரல்-மே பருவத் தேர்வு: 2017 ஏப்ரல்-மே பருவத் தேர்வில் மொத்தமுள்ள பொறியியல் 6-இல் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

6 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவும், 26 கல்லூரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவும், 41 கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவாகவும், 83 பொறியியல் கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கும் குறைவாகவும், 110 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT