சென்னை

தமிழகத்தில் 1,250 கட்டுமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

தினமணி

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், பதிவு செய்யாமல் கட்டுமானத் திட்டத்துக்கு அனுமதி கோரிய 1,250 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
 கட்டுமானத் தொழில் துறை தொடர்பான கருத்தரங்கில் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:-
 கட்டுமானத் தொழிலும், ரியல் எஸ்டேட் துறையும் தமிழகத்தின் பொருளாதாரத்தில் 30 சதவீத பங்கினை அளிக்கின்றன. இந்தத் துறையானது அதிகளவு தொழிலாளர்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு வீட்டை வாங்குவதை தங்களது வாழ்நாளின் மிகப்பெரிய முதலீடாகக் கருதுகின்றனர்.
 இதுபோன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டே, தரைதளப் பரப்புக் குறியீடை 1.5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
 மேலும், கட்டுமானத் துறையில் முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகர் மற்றும் ஊரமைப்புத் துறை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது, அனுமதிகளில் ஒற்றைச் சாளர முறையை நடைமுறைப்படுத்துவது, பொருளாதாரத்தில் வலுவில்லாத பிரிவினருக்காக கூடுதலாக 50 சதவீதமும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு 30 சதவீதமும், மத்திய வருவாய் பிரிவினருக்கு 15 சதவீதம் தரைதளப் பரப்பை அளிப்பது போன்ற பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் தருவாயில் உள்ளன.
 கடனுடன் கூடிய மானியம்: வீடுகள் கட்டும் திட்டத்துக்கு, கடனுடன் கூடிய மானியத்தை அதிகளவில் அளிப்பதை தேசிய வீட்டுவசதி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் வீடுகள் கட்டும் திட்டத்தில் கட்டுமானச் செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு உயர்த்தித் தர பரிசீலிக்க வேண்டும்.
 மேலும், ரயில்வே, ராணுவம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ள பயன்படுத்தாத நிலங்களை நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஏழைகள், வீடுகள் கட்டுவதற்கு இலவசமாக வழங்க வேண்டும். பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்தில் இதற்கான வழிமுறைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ரியல்எஸ்டேட் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ், செப்டம்பர் வரையிலான காலத்தில் 723 திட்டங்களும், 344 ரியல் எஸ்டேட் முகவர்களும் பதிவு செய்துள்ளனர்.
 மேலும், தங்களது கட்டுமானத் திட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யாமல் கட்டுமானத் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ள 1,250 கட்டுமான நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
 இந்த நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் ஹர்தீப் எஸ்.புரி, செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.ராஜேந்திரன், வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT