சென்னை

மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம்: இன்றும் தொடர்கிறது பேச்சுவார்த்தை

DIN


மெட்ரோ ரயில் ஊழியர்கள் பிரச்னையைத் தீர்வுகாண, சென்னை குறளகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை புதன்கிழமை தொடர்கிறது. 
சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு எதிராகச் செயல்பட்டதாக 8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி, மெட்ரோ  ரயில் நிறுவன ஊழியர்கள் திங்கள்கிழமை மாலை கோயம்பேட்டில் உள்ள தலைமை நிர்வாக அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென ஊழியர்கள் சிலர் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை மெட்ரோ ரயில் நிர்வாக பெண் மேலாளர் ஒருவர் தடுத்தபோது ஊழியர்கள் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. இதன்காரணமாக, ஊழியர்களுக்கும், மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு வரை பிரச்னை நீடித்தது. 
இந்நிலையில், இந்தப் பிரச்னையை  தீர்க்கும் வகையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தொழிலாளர் நல உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் தரப்பில் சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் செளந்தரராஜன், மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தலைமை பொதுமேலாளர் ராஜரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறவேண்டும் என்று ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்து விட்டதால், போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று மெட்ரோ ரயில் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.   இதனால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.   இதையடுத்து பேச்சுவார்த்தை புதன்கிழமை பிற்பகலில் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  
கருப்புப் பட்டை அணிந்திருந்த ஊழியர்கள்: முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்த இடத்திலும், அலுவலகத்துக்கு வெளியிலும் ஊழியர்கள் கருப்பு பட்டை  அணிந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அங்கு  200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர்.
மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்
சென்ட்ரல்-விமானநிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை செவ்வாய்க்கிழமை காலை நிறுத்தப்பட்டது. இதனால்,  பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். 
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சேவை நிறுத்தப்பட்டதாக  மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. 
தொழில்நுட்பக் கோளாறு என்று நிர்வாகத் தரப்பில் கூறினாலும், பணி நீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக நிலைய மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் பங்கேற்றதால், ரயில்களை இயக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. 
வண்ணாரப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வழியாக விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை செல்லும் ரயிலில் ஏறி, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி விமான நிலையம் செல்ல அறிவுறுத்தப்பட்டது. மதியத்துக்கு மேல்  எல்லா வழித்தடத்திலும் வழக்கம்போல ரயில் சேவை தொடர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT