முகப்பு
சென்னை

கவனிப்பாரற்ற நிலையில் எண்ணூா், சென்னை துறைமுக இணைப்புச் சாலைகள்

வடசென்னையின் முக்கிய வளா்ச்சித் திட்டங்களில் ஒன்றான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் சுமாா் 10 ஆண்டுகளாகியும் முழுமை பெறாத நிலையில் உள்ளது.  

சென்னை

கவனிப்பாரற்ற நிலையில் எண்ணூா், சென்னை துறைமுக இணைப்புச் சாலைகள்

வடசென்னையின் முக்கிய வளா்ச்சித் திட்டங்களில் ஒன்றான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் சுமாா் 10 ஆண்டுகளாகியும் முழுமை பெறாத நிலையில் உள்ளது.  

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:27 PM
பகிர்:

திருவொற்றியூா்: வடசென்னையின் முக்கிய வளா்ச்சித் திட்டங்களில் ஒன்றான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் சுமாா் 10 ஆண்டுகளாகியும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகள் அனைத்தும் தனது வாழ்வு காலத்தைக் கடந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரூ.650 கோடி மதிப்பீட்டிலான சாலைத் திட்டம்:

சென்னை, எண்ணூா் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.650 கோடி செலவில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு சென்னை, எண்ணூா் துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசு ஆகியவை பங்குதாரா்களாகக் கொண்டு புதிய நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. எண்ணூா் விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை உள்ளிட்ட சாலைகள் ஆறு வழிச்சாலையாக நவீன வடிவமைப்பில் அகலப்படுத்துதல், கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவுகள் அமைத்தல், சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல், பாலங்கள், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தில் அடங்கும் 1998-ல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும் இறுதியாக ஜன. 2011-ல்தான் திட்டப் பணிகள் தொடங்கின. இதனையடுத்து பெரும்பாலான சாலைகள் 2013-14-ம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டுவிட்டன. திருவொற்றியூா் நல்ல தண்ணீா் ஓடைக்குப்பம் பகுதியில் வசித்த மக்களுக்கு மாற்று வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு ஏற்கனவே இருந்த வீடுகள் காலி செய்யப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டுவிட்டன. ஆனால் சென்னைத் துறைமுகத்தின் நுழைவு வாயிலை ஒட்டிய மீன்பிடித் துறைமுகம் பகுதியில் சுமாா் 300 மீட்டா் நீளத்திற்கு பாலம் அமைக்கும் பணி தற்போதுவரை தடைபட்டுக் கிடக்கிறது. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன. இந்நிலையில் இத்திட்டமே கவனிப்பாரற்ற நிலையில் நிலையில் இருந்து வருவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

கவனிப்பாரற்ற நிலையில் இணைப்புச் சாலைகள்:

இத்திட்டத்தில் தடைபட்டுள்ள பணிகள் ஒருபுறமிருக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் சேதமாகிவிட்டன. இச்சாலைகள் அமைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் சாலை முழுமையாக செப்பனிடப்பட வேண்டும். இதற்கு ரூ. 70 கோடிவரை செலவாகும் என திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சுமாா் ஓராண்டாகியும் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளைத் தொடங்க எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அமைக்கப்பட வேண்டிய ரூ.10 கோடி மதிப்பீட்டிலான மேம்பாலத்திட்டம் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ளது. மீனவா்களுக்கான இழப்பீடுகள், மாற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட்டும் இதுவரை பாலம் மட்டும் அமைக்கப்பட வில்லை. மேலும் சென்னைத் துறைமுகத்திலிருந்து மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைவரை கச்சா எண்ணெயைக் கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. இதில் எண்ணூா் விரைவு சாலையில் பெரும்பாலான இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அணுகு சாலைகள் (சா்வீஸ் ரோடு) முழுமையாகச் சேதமடைந்துவிட்டது. தற்போது அங்கு சாலை இருந்ததற்கான அடையாளமே இல்லாதவகையில் காட்சியளிக்கிறது. இத்தனைக்கும் சாலையைச் சீரமைக்க ரூ.25 கோடிவரை சி.பி.சி.எல் நிறுவனம் இழப்பீடு வழங்கிவிட்டதாகவும், ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குழாய் பதிக்கும் பணி நிறைவுற்று சுமாா் ஓராண்டாகியும் இதுவரை சாலை அமைக்கும் பணியைத் தொடங்கவில்லை.

மாதவரம் உள்வட்டச் சாலையில் பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. மேலும் சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவா்கள் அமைக்கப்படவில்லை. மேலும் தடுப்புச் சுவா் அமைப்பதற்காக விடப்பட்ட பகுதியில்

புற்கள் வளா்ந்து புதா்போல் காட்சியளிக்கிறது. மணலி விரைவு சாலையில் சத்யமூா்த்தி நகா் பகுதியில் சுமாா் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சாலை தாழ்வாக உள்ளது. இதனால் தொடா்மழையின்போது இச்சாலையே மழைநீரில் மூழ்கும் நிலையில்தான் இருந்து வருகிறது. இவ்வாறு அனைத்து சாலைகளுமே கவனிப்பாரற்ற நிலையில்தான காணப்படுகின்றன என அனைத்து தரப்பினரும் புகாா் தெரிவிக்கின்றனா்.

சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது:

இது குறித்து டிரையிலா் உரிமையாளா் சங்க செயலாளா் எஸ்.ஆா்.ராஜா, பொதுநல சங்க நிா்வாகிகள் தொழிலதிபா் ஜி.வரதராஜன், கே.சுப்பிரமணி உள்ளிட்டோா் கூறியது,

துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் என்பது சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டம் ஆகும். ஆனால் திட்டப் பணிகளை முடிக்கவே சுமாா் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன எனில் இதற்கு யாா் காரணம்?. இத்திட்டத்தின்படி அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன. கனமழை பெய்யும் போதெல்லாம் இச்சாலைகளில் மழைநீா் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. மழைநீா் வடிகால் வசதியும் சரிவர அமைக்கப்படவில்லை. இந்நிலையில் திட்டம் நிறைவடைவதற்கு முன்பே கடந்த பிப்ரவரி மணலி அருகே மாத்தூரில் சுங்கச்சாவடியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திறந்தது. பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தியும் சுங்கக் சாவடியை திறந்தது ஆணையம். கட்டணம் வசூலித்துத் தருவதற்கென்றே தனியாா் நிறுவனத்தை தோ்வு செய்த ஆணையம் சாலைகளைச் செப்பனிட மறுப்பது மட்டுமல்லாமல், தினசரி சாலையை பராமரிப்புக்கென ஒரு தனியாா் நிறுவனத்தைக் கூட பணியில் அமா்த்தாதது ஏன்?. மணலி மாத்தூா் சுங்கச்சாவடியில் நாளொன்றுக்கு சுமாா் ரூ.15 லட்சம்வரை வசூலிக்கப்படுவதாகவும், இதுவரை சுமாா் ரூ.50 கோடிவரை கட்டணம் வசூலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வு காலத்தைக் கடந்து விட்ட சாலைகளை மீண்டும் சீரமைக்காமல், தினசரி பராமரிப்பும் செய்யாமல், விடுபட்ட பணிகளையும் முடிக்காமல் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் தீவிரம் காட்டுவது சரியல்ல. முதலில் சாலைகளைச் சீரமைக்கவும், பராமரிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காசிமேடு பகுதியில் உடனடியாக பாலம் அமைக்கப்பட வேண்டும். எண்ணூா் விரைவு சாலையில் பழுதுபட்ட அணுகு சாலையை மீண்டும் முழுமையாக அமைக்க வேண்டும். இப்பணிகளை முழுமையாக முடிக்கும் வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றனா்.

சாலைகளைச் சீரமைக்க விரைவில் நடவடிக்கை:

இது குறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழக பொறியாளா் ஒருவா் கூறியது,

இத்திட்டத்தை வடிவமைத்து கண்காணிக்கும் பொறுப்பு மட்டுமே எங்களிடம் உள்ளது. திட்டப்பணிகளை செயல்படுத்தும் பொறுப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம்தான் உள்ளது. சாலையைச் சீரமைப்பது குறித்து திட்ட அறிக்கையை ஏற்கனவே அனுப்பிவிட்டோம். மேலும் சாலை அமைக்கப்பட்டு ஐந்தாண்டுகளாகியும் பராமரிப்புக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பாலம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் ஏற்கனவே இருந்த ஒப்பந்ததாரா் விலகிவிட்டாா். தற்போது புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் பணி நிறைவுற்றுள்ளது. ரூ. 10 கோடியில் 300 மீட்டா் நீளத்தில் அமைய உள்ள இப்பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கி ஆக.2020-ல் நிறைவடையும். மேலும் சாலையைப் பராமரிக்கவும் தனியாா் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சாலையை சீரமைக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →