சென்னை

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 71 அரிய நூல்கள் வெளியீடு

DIN

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 71 அரிய நூல்கள்,  71 ஆய்வு நூல்களை  அமைச்சர் க.பாண்டியராஜன் வெளியிட்டார்.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  71-ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்த்தாய் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்தார்.  இதில் கவியரங்கம்,  கருத்தரங்கம்,  கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு  "பூம்பாவையார் விலாசம்-வரதராஜ முதலியார்  (1827), தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - மகாலிங்கையர்  உரை (1847), திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் (1909), திரிகடுகம் - நல்லாதனார் (1920), நந்திக் கலம்பகம் - அ.கோபாலையர் (1927), தமிழ்ச்சொற் பிறப்பாராய்ச்சி - சுவாமி ஞானப்பிரகாசர் (1932) ஆகியவை உள்பட 71 அரிய நூல்கள்,  71 ஆய்வு நூல்களை வெளியிட்டு அவர் பேசியது:   
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உலகளாவிய வளர்ச்சியைத் தமிழ் மொழிக்குத் தரவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார்.  அதனால்தான்  மதுரையில் எம்.ஜி.ஆரால் அடிக்கல் நாட்டப்பட்ட உலகத் தமிழ்ச்சங்கத்தைப் புத்துயிர்ப்பு  செய்வதற்காக ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்தார். 
மொழி வளர்ச்சிக்கான நலத்திட்டச் செயல்பாடுகளில் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை அவரிடம் காண முடிந்ததது. தமிழ்ப் புத்தகங்களை  நேசித்து வாசிக்கும் தமிழ்  உள்ளம் கொண்டவராக  அவர் விளங்கினார் என்றார்.  
விழாவில் வெளியிடப்பட்ட நூல்களின் முதல் பிரதியை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பெற்றுக் கொண்டார்.  
முன்னதாக   விழாவில் மக்களவை உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் இரா.வெங்கடேசன்,  எழுத்தாளர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி.சந்தோஷம்,  பேராசிரியர்கள் கு.சிதம்பரம்,  சுலோசனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT