சென்னை

ரூ.73 கோடியில் நகர் நிர்வாக அலுவலக வளாகக் கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்

DIN


சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை எம்.ஆர்.சி. நகரில் கட்டப்பட்ட நகர் நிர்வாக அலுவலக வளாகக் கட்டடத்தை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தார். நகராட்சி நிர்வாக ஆணையரகம், பேரூராட்சிகள் இயக்ககம் ஆகியன இந்தக் கட்டடங்களில் செயல்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் சென்னையைத் தவிர்த்து 11 மாநகராட்சிகள், 124 நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலகமாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று, பேரூராட்சி திட்டப் பணிகளை பேரூராட்சிகள் இயக்ககம் இயக்கி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நகராட்சி நிர்வாக அலுவலகமும், குறளகம் வளாகத்தில் பேரூராட்சிகள் இயக்ககமும் செயல்பட்டு வந்தன. இந்த அலுவலகங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதற்குப் போதிய கூட்டரங்குகள் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்து வந்தன. இந்தச் சூழ்நிலையில், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் இயக்ககம் ஆகியவற்றுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை எம்.ஆர்.சி. நகரில் கட்டப்பட்டது. ரூ.73 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தப் புதிய கட்டடத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இந்தக் கட்டடம் 11 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில் தரை மற்றும் 11 தளங்களுடன் இயங்கி வருகிறது. இந்தப் புதிய கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் சராசரியாக ஆயிரம் சதுர மீட்டர் பரப்பு கொண்டது. இந்தக் கட்டடத்தின் தரைதளத்தில் இருக்கை வசதியுடன் கூடிய உணவகம், முதல் தளத்தில் கருத்தரங்கக் கூடம், ஆறாம் தளத்தில் ஆய்வு கூட்ட அரங்கு, காணொலி கூட்ட அரங்கு, பயிற்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏழாம், எட்டாம் தளங்களில் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகமும், ஒன்பது, பத்து மற்றும் 11-ஆம் தளங்களில் நகராட்சி நிர்வாக அலுவலகமும் செயல்படும். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT