சென்னை

தமிழ், சம்ஸ்கிருதம் இடையே தொன்மை குறித்த முரண்கள் தேவையற்றது: நீதிபதி கிருபாகரன்

DIN

தமிழ், சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் மிகப் பழைமையான மொழி எது என ஆராய்வது தேவையற்றது என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
 ரீச் அறக்கட்டளை சார்பில் புராதன சின்னங்களைக் காக்க முயற்சிக்கும் தன்னார்வலர்களுக்கான விருது வழங்கும் விழா, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியது: தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஏதேனும் ஒரு பழைமை வாய்ந்த இடம் அமைந்திருக்கும். பல்லாவரம், அத்திரம்பாக்கம், மாங்குளம், சமணர்மலை, ஆதிச்சநல்லூர், அழகன்குளம், போன்ற பகுதிகளில் பல சிக்கல்களை சமாளித்து, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள தொன்மையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபோன்று தமிழகம் முழுவதும் நிரம்பி உள்ள அனைத்து புராதன பொருள்களையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நம்மிடையே இல்லை.
 நமது முன்னோர்களின் கட்டடக் கலை ஆகச் சிறந்தது. இத்தனை ஆண்டுகள் சென்றபிறகும் அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் கட்டிய அனைத்தும் உலகின் வேறு பகுதிகளில் இருந்திருந்தால், கொண்டாடப்பட்டிருப்பார்கள். மொழிகளின் பழைமை குறித்து பேசும்போது, தமிழ், சம்ஸ்கிருதம் இடையேயான முரண்கள் தேவையற்றவை. இரண்டு மொழிகளுமே மிகவும் பழைமை வாய்ந்தவை என்றார்.
 தொடர்ந்து ஒடிஸா மாநில அரசின் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் பேசியது: நமது இலக்கியங்கள் மிகவும் பழைமை வாய்ந்தவை. அவை பாலினம், சாதி வேறுபாடு இன்றி அமைக்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக சங்க இலக்கியங்களை இயற்றியதில் 30 பெண்பாற் புலவர்களும், நாயன்மார்களில் அனைத்து சமூகத்தினரும் இருந்தனர் என்றார்.
 இந்நிகழ்வில் புராதன பொருள்களைப் பாதுகாக்க முயற்சி எடுத்ததற்காக கை வைஸ், மது ஒட்டேரி, எஸ்.டி.ராஜ்மோகன், துரை சுந்தரம், ஸ்ரீரமணா சர்மா, உதயன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ரீச் அறக்கட்டளை நிர்வாகிகள் டி.சத்தியமூர்த்தி, பி.என்.சுப்ரமணியன், எச்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT