சென்னை

வேலூர்- சென்னை வழித்தடத்தில் நவீன வசதிகளுடன் குளிர்சாதனப் பேருந்து: நபருக்கு ரூ.160 கட்டணம்

DIN


தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வேலூரிலிருந்து சென்னைக்கு அதிநவீன வசதிகளுடன் குளிர்சாதனப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.160  என்ற கட்டணத்தில் இயக்கப்படும் இந்தப் பேருந்துக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையிலிருந்து, பல்வேறு வழித் தடங்களுக்கு புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இவற்றில், சென்னையிலிருந்து திருவண்ணாமலை, வேலூருக்கு பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதனப் பேருந்துகளின் இயக்கமும் அடங்கும். 
வேலூர் புதிய பேருந்து நிலையம் வந்த குளிர்சாதனப் பேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கும் குளிர்சாதன பிளோயர்கள் உள்ளன. இருக்கையின் பின்புறம் செல்லிடப்பேசிக்கு சார்ஜ் செய்யும் வசதியும், காற்று, அவசரக் கதவு வசதிகள் பேருந்தின் மேற்புறத்தின் இரு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தின்போதும் எந்த நிறுத்தம் என்பதை பயணிகளுக்கு அறிவிக்க 6 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஒலிபெருக்கியும் உள்ளன. 
பேருந்தில் குளிர்ந்த காற்று குறையாமல் இருக்க மேற்கூரை, பக்கவாட்டில் பி.வி.சி பேனல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க, பின்பக்க படிக்கட்டுகளில் உள்ள கதவுகள் தானியங்கி முறையில் இயங்குகின்றன. அத்துடன், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி போன்ற நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. 
இத்தகைய அதிநவீன வசதிகள் கொண்ட   குளிர்சாதனப் பேருந்தில் வேலூரில் இருந்து சென்னைக்கு செல்ல ரூ. 160 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண பேருந்துக் கட்டணத்தைவிட ரூ. 30-உம், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துக் கட்டணத்திலிருந்து ரூ. 10 மட்டுமே அதிகம்.
வேலூரிலிருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கும், பகல் 2 மணிக்கும் இந்த குளிர்சான பேருந்து இயக்கப்படுகிறது. அதேபோல, சென்னையிலிருந்து காலை 10 மணிக்கும்,  மாலை 5.30 மணிக்கும் வேலூருக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
கோடைக்காலத்தில் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு   அதிநவீன வசதிகளுடன் குறைந்தக் கட்டணத்தில் இயக்கப்படும் இந்த அரசுப் பேருந்துக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT