சென்னை

ரூ.40 லட்சத்தில் கிண்டி சிறுவர் பூங்காவில் 3டி திரையரங்கம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

DIN


சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் ரூ. 40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 3டி அனிமேஷன் திரையரங்கை வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனர்.
தமிழக வனத் துறை சார்பில்  வன உயிரின வார விழா கடந்த 2-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (அக். 8) தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு வனத் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் தலைமை வகித்தார். முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் பெ.துரைராசு முன்னிலை வகித்தார்.
இதில்,  வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரூ. 40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 3டி அனிமேஷன் திரையரங்கை திறந்து வைத்தனர்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.40 லட்சம் மதிப்பில் இந்த 3டி அனிமேஷன் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் புலி, குரங்கு, சிறுத்தை, பாம்புகள், கரடிகள், கங்காரு, பென்குயின், டால்பின், டைனோசர், ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகள்அருகில் இருப்பது போன்றும், அதை தொட்டுப் பார்ப்பது போன்ற அனுபவத்தையும் பெறமுடியும்.  ஒவ்வொரு விலங்கும் அதற்கேற்ற வாழ்விடத்தில் இருப்பது போன்றும், அதற்கு மத்தியில் இருப்பது போன்றும் இந்தத் திரையரங்கம் கட்டமைப்பட்டுள்ளது.
12 நிமிடங்கள் திரையிடப்படும் இந்தக் காட்சிக்கு 14 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ரூ. 25, அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. இது பொதுமக்கள் பார்வைக்கு விரைவில் கொண்டுவரப்பட உள்ளது என்றனர்.
தரம் உயர்வு: இதைத் தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 2011-இல் இருந்து தற்போது வரை 5 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி,  71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  கிண்டி சிறுவர் பூங்காவுக்கு ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் பேர் வருகை புரிவதையொட்டி, மிகச்சிறு பூங்கா என்ற நிலையில் இருந்து நடுத்தர பூங்கா என்ற அந்தஸ்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வழங்கி உள்ளது. 
இதன் மூலம் வருங்காலத்தில் கிண்டி பூங்காவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறும்.  வன விலங்குகள் தாக்குதலால் உயிரிழக்கும் வன அலுவலர்களின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சமாக இருந்த நிவாரணத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில், தலைமை வன உயிரினக் காப்பாளர் சஞ்சய்குமார் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட வனத் துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT