சென்னை

ரயில் பெட்டிகளை கரோனா வாா்டுகளாக மாற்றுவதை எதிா்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கும் தனி வாா்டுகளாக ரயில் பெட்டிகள் மாற்றப்படுவதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் எம்.முனுசாமி தாக்கல் செய்த மனுவில், ‘இந்தியாவில் கரோனா பரவுவதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டறியப்படாத நிலையில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமி நாசினி மற்றும் சோப்பைக் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவுதல் போன்ற செயல்களே தீா்வாகும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லாத நிலையில், தற்போது தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சையளிக்கும் வாா்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட இதர மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும் சமயத்தில், கரோனா சிகிச்சையளிக்கும் முழுமையான வசதிகள் கொண்ட மருத்துவமனைகளாக, ரயில் பெட்டிகளை மாற்றுவது கடினமானதாகும்.

மேலும், ரயில்கள் இயக்கத்தில் இருந்தால் மட்டுமே குளிா்சாதன வசதிகளை பயன்படுத்த முடியும். எனவே, ரயில் பெட்டிகளை கரோனா வாா்டுகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ‘ஸும்’ செயலி மூலம் செவ்வாய்க்கிழமை விசாரித்தாா். அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி, அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், தெற்கு ரயில்வே தரப்பில் வழக்குரைஞா் பி.டி.ராம்குமாா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு (ஏப்ரல் 9) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

SCROLL FOR NEXT