சென்னை

மருந்துப் பொருள்கள் இறக்குமதிக்கு புதிய சலுகை

DIN


சென்னை: வெளிநாட்டு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான உரிமம் காலாவதியாகிவிட்டாலும், மருந்துப் பொருள்களைத் தடையின்றி தருவிக்கக் கூடிய வகையிலான சலுகையை மத்திய அரசு அளித்துள்ளது. அதன்படி, புதிய உரிமம் பெறும் வரை எந்தத் தடையும் இன்றி இறக்குமதி நடவடிக்கைகளைத் தொடர சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவக்கூடாது என்ற நோக்கில் இந்த முடிவை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் தடம் பதித்த கரோனாவுக்கு தற்போது வரை 95 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர், எனாக்ஸபெரின், டோசிலிசுமேப் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவைதவிர, கரோனா பரிசோதனைகளுக்கு ஆர்டி-பிசிஆர் உபகரணங்களும், துரிதப் பரிசோதனை உபகரணங்களும் உபயோகப்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பிற நாடுகளில் இருந்தே இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன.
ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளும், மருத்துவப் பொருள்களும் பல்வேறு நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான மூன்றாண்டு உரிமங்கள் பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் உரிமங்கள் மூன்றாண்டு காலத்தை ஏறத்தாழ நிறைவு செய்துவிட்டன.
இதனால், அவை புதிதாக உரிமத்துக்கு விண்ணப்பித்து, பரிசீலனை நடைமுறைகள் நிறைவடைந்த பிறகே இறக்குமதியைத் தொடரக் கூடிய நிலை ஏற்பட்டது. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலில் மக்களின் நலன் கருதி மருந்து பொருள்களின் இறக்குமதியில் எந்தவிதமான தடையும் ஏற்படுத்த வேண்டாம் என பல நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
அதன் அடிப்படையில், அந்த கோரிக்கைகளை ஏற்று மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
அதன்படி, புதிய உரிமம் பெறும் வரை ஏற்கெனவே உள்ள உரிமத்தைக் கொண்டு (காலாவதியாகியிருந்தாலும்) இறக்குமதி நடவடிக்கைகளைத் தொடர மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த சலுகை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகாசி மாதப் பலன்கள் - துலாம்

வைகாசி மாதப் பலன்கள் - கன்னி

வைகாசி மாதப் பலன்கள் - சிம்மம்

வைகாசி மாதப் பலன்கள் - கடகம்

தமிழில் ரீ-மேக்காகும் ஹிந்தி தொடர்! ஜோடி யார் தெரியுமா?

SCROLL FOR NEXT