முகப்பு
சென்னை

சென்னையில் 14 கூடுதல் நீதிமன்றங்கள்: தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி திறந்து வைத்தாா்

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 14 கூடுதல் நீதிமன்றங்களை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி திறந்து வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


சென்னை: சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 14 கூடுதல் நீதிமன்றங்களை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி திறந்து வைத்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநகர உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி பதவிக்கு இணையான நீதிபதிகள் விசாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 4 நீதிமன்றங்கள், அல்லிக்குளம் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நீதிமன்றத்தில் மூத்த உரிமையியல் நீதிபதி பதவிக்கு இணையான நீதிபதிகள் விசாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 10 கூடுதல் உதவி நீதிமன்றங்களும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 14 கூடுதல் நீதிமன்றங்களின் திறப்பு விழா, சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த விழாவில், மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமாா் வரவேற்றாா். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசியது:

பொதுமக்களுக்கு நீதி விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதித்துறையின் செயல்பாடுகள் விரிவாக்கக்கப்படுவதன்படி சென்னையில் புதிதாக 14 நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல். புதிய நீதிமன்றங்கள் உருவாக நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி. வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான இலக்கை அடைவதற்கு புதிய நீதிமன்றங்கள் உதவியாக இருக்கும். கரோனா நோய்த்தொற்றுக் காலத்திலும் நீதிமன்றம் சுமுகமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நீதித்துறை பணியாளா்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும் பாராட்டுகள். நீதிமன்றம் சுமுகமாக செயல்பட வழக்குரைஞா்கள் தங்களது பங்களிப்பைத் தொடா்ந்து அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி எம்.கோவிந்தராஜ், தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், சென்னை மாவட்ட ஆட்சியா் சீதாலட்சுமி, காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் செங்குட்டுவன், செயலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →