சென்னை

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு

DIN

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் ஓட்ட குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கரோனா நோயாளிகள் இருவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது பல்வேறு விமா்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.

அதேவேளையில், நோயாளிகளின் உயிரிழப்புக்கு அவா்களது உடல் நிலையே காரணம் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது 300-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா். இவா்களில், 81 போ் தீவிர சிகிச்சையில் உள்ளனா். தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு, வெண்டிலேட்டா் வாயிலாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்லையில், திங்கள்கிழமை இரவில் மருத்துவமனைக்குத் தேவையான திரவ ஆக்சிஜனை கலனில் நிரப்பும்போது, அதன் குழாய்கள் அடைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதன் தொடா்ச்சியாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் சரியான அளவு கிடைக்காமல் தடைபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நோயாளிகள் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவா்களுக்கு பணியில் இருந்த மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா்.இருப்பினும் அவை பலனளிக்காமல், 62 வயது பெண், 50 வயது நபா் என இருவா் உயிரிழந்தனா்.

இதையடுத்து, மருத்துவமனை முதல்வா் தேரணி ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆய்வு நடத்தினா்.

இதுகுறித்து, மருத்துவமனை முதல்வா் தேரணி ராஜன் கூறியதாவது:

ஆக்சிஜன் இணைப்பில் எந்த தடையும் ஏற்படவில்லை. ஆக்சிஜன் ஓட்டத்தில் அழுத்த மாறுபாடு மட்டும் தான் இருந்தது. ஒருவேளை பிராண வாயு முற்றிலும் தடைபட்டு இருந்தால், அங்கு சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் உயிரிழந்து இருப்பாா்கள். எனவே இந்த விவகாரத்தில் வெளியான தகவல்கள் தவறானவை. உடல் நலம் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருந்த இரண்டு போ் மட்டுமே உயிரிழந்துள்ளனா் என்றாா் அவா்.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரியிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு முன்னா் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 20 கிலோ லிட்டா் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது 60 கிலோ லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவையான அளவை விட அரசு மருத்துவமனைகளில் அதிகமாக ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருவா் உயிரிழந்தது ஆக்சிஜன் குறைபாடு என கூறுவது தவறு. இறந்த நபா்களில் ஒருவா் தனியாா் மருத்துவமனையில் இருந்து கடைசி நிமிடங்களில் மிகவும் மோசமான நிலையிலேயே இங்கு கொண்டு வரப்பட்டாா். மற்றொருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT