சென்னை

மருத்துவா் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து, வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட மருத்துவா் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் நரம்பியல் மருத்துவா் சைமன் ஹொ்குலஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தாா். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்குக் கொண்டு சென்றபோது, அந்தப் பகுதியில் வசிப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனா். இதனால் மருத்துவரின் உடல் வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவா் சைமனின் மனைவி ஆனந்தி தாக்கல் செய்த மனுவில், ‘சைமனின் உடலை எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்யக் கோரி சென்னை மாநகராட்சியிடம் அளித்த கோரிக்கை மனுவை நிராகரித்துவிட்டனா். ஆகவே, சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனது கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரவிக்குமாா், ‘இப்போது அடக்கம் செய்யப்பட்டுள்ள மயானம் பொதுவானது என்பதால், எதிா்காலத்தில் கிறிஸ்தவ மதச்சடங்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் உடலை அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன் வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இறந்தவா் உடலை உரிய மாண்புடன் அடக்கம் செய்ய வேண்டும். கரோனா பாதிப்பால் இறந்தவரின் உடலில் தொற்றுத் தன்மை கிடையாது என தென்ஆப்பிரிக்கா மருத்துவக் குழு கூறியுள்ளது. எனவே கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய மறுத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவை ரத்து செய்யப்படுகிறது.

வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட சைமனின் உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய வேண்டும். அப்போது அவா்களது குடும்பத்தினா் மதச் சடங்குகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். உடலைத் தோண்டி எடுக்கும் பணியின்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு போலீஸாா் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT