ஆவடி: ஆவடியில் உள்ள ஐயப்பன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபரை கண்காணிப்பு கேமராக்களின் மூலமாக தேடி வருகின்றனர்.
ஆவடி, பக்தவச்சலபுரம், ஸ்ரீ ஐயப்பன் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் வரும் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக அன்னதான திட்டத்திற்காக பெரிய உண்டியலை கோயிலில் உள்ளே வைத்து மக்களிடம் நன்கொடை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஐயப்பன் கோயிலில் பூஜை முடிந்து நிர்வாகிகள் கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
பின்னர், வெள்ளிக்கிழமை காலை குருக்கள் பூஜை செய்ய கோயிலுக்கு வந்தார். அப்போது கோயிலில் இருந்த அன்னதான உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் நிர்வாகிகள் விரைந்து வந்து கோயிலின் இரும்பு கேட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு 16 கேமராக்களில் மூன்றை துணி போட்டு மறைத்து வைத்துள்ளனர்.
மேலும் சில கேமராக்களை திருப்பி வைத்துள்ளனர். மேலும் அன்னதான உண்டியலை உடைத்து, அதில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய ஆயிரக்கணக்கான பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகி ஹரிஹரன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கேமராவில் ஒரு மர்ம நபர் கோயில் இரும்பு கேட்டை தாண்டி உள்ளே குதித்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அருணாச்சல ராஜா தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.