முகப்பு
சென்னை

முதல்வா், தலைவா்கள் வாக்களிக்கும் இடங்கள்

மக்களவைத் தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் வெள்ளிக்கிழமை வாக்களிக்க உள்ளனா்.

Updated On : 18 ஏப்ரல், 2024 at 8:19 PM
பகிர்:

மக்களவைத் தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் வெள்ளிக்கிழமை வாக்களிக்க உள்ளனா்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் காலை 9 மணியளவில் வாக்களிக்க உள்ளாா். அவருடன், மனைவி துா்கா ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் வாக்களிக்க உள்ளனா்.

Advertisement

அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் வாக்களிக்க உள்ளாா். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பெரியகுளத்திலும், மதிமுக பொதுச் செயலா் வைகோ கலிங்கப்பட்டியிலும், பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் திண்டிவனம் தைலாபுரத்திலும் வாக்களிக்க உள்ளனா்.

தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும், விசிக தலைவா் தொல் திருமாவளவன் அரியலூா் மாவட்டம் அங்கனூா் கிராமத்தில் ஊராட்சி தொடக்கப் பள்ளியிலும், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள பள்ளியிலும் வாக்களிக்க உள்ளனா்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள பள்ளியிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டியிலும், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி அடையாறு மாநகராட்சி பள்ளியிலும் வாக்களிக்க உள்ளாா்.

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு நெற்குன்றம் எம்.ஆா்.மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் காலை 7.45 மணியளவில் வாக்களிக்க உள்ளாா்.

நடிகா்கள் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும், விஜய் நீலாங்கரை ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலும், அஜித் திருவான்மியூா் கடற்கரை சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும் வாக்களிக்க உள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments