பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்
சென்னையில் பட்டியலின வகுப்பைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞருக்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி டி.வி.புரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். தனியாா் நிறுவன ஊழியரான இவருக்கும், கணக்காளராகப் பணியாற்றி வந்த வட சென்னையைச் சோ்ந்த எம்பிஏ பட்டதாரி பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய ரமேஷ், அவரை பாலியல் வன்கொடுமை செய்து, நகை, பணம் உள்ளிட்டவற்றையும் பறித்து ஏற்மாற்றியுள்ளாா். மேலும், அந்தப் பெண்ணை ஜாதியை சொல்லி திட்டியுள்ளாா்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் எம்கேபி நகா் போலீஸாா் ரமேஷ் மீது 2020- ஆம் ஆண்டு மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பான வழக்கு, சென்னை வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, நீதிபதி அல்லி முன்பாக புதன்கிழமை நடந்தது. அப்போது, ரமேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.