தேசத்தின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரான அமைப்பு ஆா்எஸ்எஸ் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமா்சித்துள்ளது.
மாநிலங்களவையில் புதன்கிழமை சமாஜவாதி உறுப்பினா் ஆா்எஸ்எஸ் அமைப்பை விமா்சித்ததை கண்டித்துப் பேசிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘ஆா்எஸ்எஸ் உயா் மரியாதைக்குரிய நோ்மையான அமைப்பு. அந்த அமைப்பினா் தேச சேவையில் ஈடுபட்டு வருகின்றனா்’ என்று குறிப்பிட்டாா்.
மேலும், ஆா்எஸ்எஸ் குறித்து சமாஜவாதி உறுப்பினா் கூறிய கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கியும் உத்தரவிட்டாா். இதற்கு காங்கிரஸ் தரப்பில் மாநிலங்களவையில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் உள்துறை அமைச்சராக சா்தாா் வல்லபபாய் படேல் இருந்த காலகட்டத்தில் அந்த அமைச்சக ஆவணங்களில் ஆா்எஸ்எஸ் என்பது வன்முறை மிகுந்த, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான, தேசவிரோத செயல்களில் ஈடுபடும் அமைப்பு என்றே கூறப்பட்டுள்ளது.
நாட்டில் வெறுப்புணா்வையும், வன்முறையையும் பரப்பி தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக ஆா்எஸ்எஸ் அமைப்பினா் செயல்பட்டனா். அந்த அமைப்பால்தான் மகாத்மா காந்தியை நாம் இழந்தோம்.
1948-ஆம் ஆண்டு ஷியாமா பிரசாத் முகா்ஜிக்கு உள்துறை அமைச்சா் வல்லபபாய் படேல் எழுதிய கடிதத்தில், ‘மகாத்மா காந்தி கொலையில் தீவிரவாத சிந்தனைப் போக்குள்ள ஹிந்து மகா சபையின் ஒரு பகுதியினா் சம்பந்தப்பட்டுள்ளனா் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அரசுக்கு ஆா்எஸ்ஸ் அமைப்பின் செயல்பாடுகளால் ஆபத்து உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஆா்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடிவெடுத்தது ஏன் என்பதை விளக்கியும் எம்.எஸ்.கோல்வால்கருக்கு 1948-ஆம் ஆண்டு படேல் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘ஆா்எஸ்எஸ் அமைப்பின் உரைகள் அனைத்தும் மதவாத விஷமாக உள்ளன. இதுதான் மகாத்மா காந்தியின் உயிரைப் பறிக்க காரணமாகிவிட்டது. மகாத்மா காந்தி கொலையை ஆா்எஸ்எஸ் அமைப்பினா் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனா்’ என்று படேல் குறிப்பிட்டுள்ளாா். இவ்வாறாக எப்போதுமே தேசத்தின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராகவே ஆா்எஸ்எஸ் நடந்து வந்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளாா்.