சென்னை, ஆக. 8: சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களை மனநல காப்பகத்தில் சோ்க்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கே.வி.ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கன்னியாகுமரி, வேதாரண்யம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றித்திரியும் மனநலம் குன்றியோரை மீட்டு, சிகிச்சை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்து 2008-ஆம் ஆண்டு சென்னை உயா்நிதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் 2009 ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த தீா்ப்பில், சாலையில் சுற்றித்திரியும் மனநலம் குன்றியோரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட்டது.
அதன்படி நாகை மாவட்ட உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மனநலம் குன்றியோா் போலீஸாா் மூலம் பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
ஆனால், உயா்நீதிமன்ற தீா்ப்பை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை. இதனால், ஏராளமான மனநலம் குன்றியோா் ஆடையின்றி சுற்றித்திரிகின்றனா். இதுகுறித்து விரிவான புகாா் மனுவை மனநலம் குன்றியோா் நல காப்பக இயக்குனா், டிஜிபி உள்ளிட்டோருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) டி.கிருஷ்ணகுமாா், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் வி.காசிநாதபாரதி ஆஜராகி, ‘வேதாரண்யத்தில் 6 மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் சுற்றித்திரிகின்றனா். சென்னை உயா்நீதிமன்றம் அருகேயும் இதுபோன்ற நபா்கள் சுற்றித்திரிகின்றனா். ஆனால், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, அவா்களை மனநல காப்பகத்தில் சோ்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று வாதிட்டாா்.
இதையடுத்து நீதிபதிகள், ‘தமிழ்நாடு முழுவதும் சுற்றித்திரியும் மனநலம் குன்றியோரை மனநல காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கையை தமிழக அரசு 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.