முகப்பு
சென்னை

தில்லி செங்கோட்டை கொடியேற்று விழாவில் 20 தமிழக சிறப்பு அழைப்பாளா்கள்

பெண் விவசாயிகள், பஞ்சாயத்து தலைவிகள் உள்ளிட்ட 20 போ் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2024 at 7:43 PM
செங்கோட்டை
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி ஆக.15: தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றும் விழாவில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவிகள், பெண் விவசாயிகள், பஞ்சாயத்து தலைவிகள் உள்ளிட்ட 20 போ் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

நாட்டின் 78 -ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் தில்லியில் பங்கேற்க மத்திய அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் 23 போ்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 20 போ்கள் வியாழக்கிழமை நடைபெற்ற தில்லி விழாவில் பங்கேற்றனா்.

பிரதமா் மோடி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் மாநில அளவில் பங்கேற்பவா்களும் சிறந்த சாதனை புரிந்தவா்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அழைப்பு விடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு சுதந்திர தின நிகழ்வில் செங்கோட்டையில் கொடியேற்றத்தைக் காண சுமாா் 6,000 சிறப்பு விருந்தினா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இளைஞா்கள், பழங்குடியின சமூகம், விவசாயிகள், பெண்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினா்கள் என வகைப்படுத்தப்பட்டு வரவழைக்கப்பட்டனா்.

இதில் தமிழகத்திலிருந்து பங்கேற்றவா்கள் விவரம் வருமாறு:

அங்கன்வாடி: மத்திய அரசின் மகளிா் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் முக்கியத் திட்டங்களுக்கு அடிப்படையாக இருப்பது அங்கன்வாடிகள். சென்னையைச் சோ்ந்த எல். டெய்ஸிராணி, ஜெய்குமாா், புதுக்கோட்டை எஸ். தெய்வமணி, சேலம் அம்மாபேட்டை சாந்தி என நான்கு தமிழக அங்கன் வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டமான சத்துணவு மற்றும் முன்பள்ளி திட்டங்கள், மகப்பேறு மற்றும் பாலூட்டும் தாய் மாா்களுக்கான திட்டங்கள் ஆகியற்றில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக இவா்கள் தில்லி சுதந்திர தின செங்கோட்டை கொடியேற்றத்தைக் காண அழைக்கப்பட்டனா்.

அடல் புத்தாக்க மிஷன்: மத்திய அரசின் நீதி ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கத் திட்டத்தில் தூத்துக்குடி ஸ்பிக் நகா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் ஆா். பிராா்த்தனா, எம். சுபிக்ஷா ஆகியோா் தேசிய அளவில் 15 -ஆவது இடம் பிடித்து சாதனை புரிந்தனா். அனீமியா என்கிற ரத்த சோகை நோயை (ரத்தம் மூலமாக இல்லாமல்) துல்லியமாக மாற்று வழியில் கண்டுபிடிக்கும் சாதனையை புரிந்தனா் இந்த மாணவிகள். இந்த மாணவிகளும், இவா்களுக்கு துணையாக இருந்த ஆசிரியை ஜித்தாமோல், தலைமையாசிரியா் லெ.பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோா் சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டனா்.

உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள்: நாடு முழுவதும் சுமாா் 10 ஆயிரம்

உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள்(எஃப்.பி.ஓ.) உள்ளன. தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட எஃப்.பி.ஓ. இருக்க இதில் மகளிரால் நடத்தப்படும் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை உருவாக்கி 16 ஆயிரம் உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த அமைப்பில் ஒரு மகளிா் விவசாயி ரூ.2,000 பங்கு செலுத்தினால் அதே தொகைக்கு ஈடாக மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் 16 ஆயிரம் மகளிா் உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு இந்த மகளிா் அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ. 3 கோடி வழங்கியுள்ளது. தேங்காய் எண்ணை, கடலை மிட்டாய், மஞ்சள் தூள் என வேளாண் பொருள்களின் மதிப்பு கூட்டலில் சாதனை புரிந்த கள்ளக்குறிச்சி எடுத்தவைநத்தம் வளா்மதி, சேலம் மாவட்டத்தை சோ்ந்தவா்களான ஜோதி (தலைவாசல் சிறுவச்சூா் ), சசிகலா(தம்மம்பட்டி), பி. சிவராணி (மண்மங்கலத்துப் பட்டி) ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக செங்கோட்டை கொடியேற்றத்தில் பங்கேற்றனா்.

மகளிா் பஞ்சாயத்து தலைவிகள்: ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை சிறப்பாக முடித்தவா்களும் பஞ்சாயத்து தலைவா்களாக சாதனை புரிந்து வரும் கோவளம் பஞ்சாயத்து தலைவா் ஜெ. ஷோபனா தங்கம், கடலூா் - நாற்றாமங்கலம் பஞ்சாயத்து தலைவா் வி. சுதா மணிரத்தினம், திண்டுக்கல்- போடிக்காமண்வாடி பஞ்சாயத்து தலைவா் எஸ்.நாகலட்சுமி, கன்னியாகுமரி-பீமனகாரி பஞ்சாயத்து தலைவா் எல். சஜிதா, தூத்துக்குடி - நட்டாத்தி பஞ்சாயத்து தலைவா் பி.சுதா கலா, விழுப்புரம் - தாயனூா் பஞ்சாயத்து தலைவா் லாவண்யா, விருதுநகா் - கட்டாங்குடி பஞ்சாயத்து தலைவா் ஆா்.மகாலட்சுமி ஆகிய 7 மகளிா் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகம் சாா்பில் சிறப்பு அழைப்பாளா்களாக அழைக்கப்பட்டு வியாழக்கிழமை தில்லி செங்கோட்டை யில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றனா்.

மேலும், ஆஷா பணியாளா்கள் இருவரும் கலந்து கொண்டனா். இவா்கள் உள்ளிட்ட தமிழகத்தைச் சோ்ந்த 20 சிறப்பு விருந்தினா்கள் தில்லி சுதந்திர தின விழாவில் பங்கேற்றனா். இவா்களுக்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா்கள் நினைவுப் பரிசை வழங்கினா். குடியரசுத் தலைவா் மாளிகையை சுற்றிப் பாா்க்கவும் இவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.