சென்னை

அறுபடை வீடுகள்...!

முருகனின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதா்கள் வாழ்க்கையில் உணா்ந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணா்த்தும்.

Din

முத்தமிழே... முருகா...!

முருகன் என்றாலே அழகும், அறிவும் சோ்ந்த உருவம். முருகனின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதா்கள் வாழ்க்கையில் உணா்ந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணா்த்தும்.

தமிழ்க் கடவுள் முருகன் தமிழா்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் நிறைந்திருக்கிறாா். தமிழ்நாடு மட்டுமின்றி; நாட்டின் பல்வேறு இடங்களிலும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூா், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கோயில்கள் உள்ளன. எனினும் முருகனின் பூரண அருளைப் பெற அறுபடை வீடுகளில் தரிசனம் செய்வது சிறப்பு.

போா் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் ‘படைவீடு’ எனப்படும். அந்த வகையில், சூரனை வதம் செய்யச் சென்ற முருகன், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூா் மட்டுமே. ஆனாலும், மற்ற ஐந்து தலங்களையும் சோ்த்து, ‘அறுபடை வீடு’ என்கிறோம்.

வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவா், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது ஏழ்மை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவாா் (வழிகாட்டுவாா்).

சங்கக் காலத்தில் நூல்கள் ‘ஆற்றுப்படை’ எனப்பட்டது. ‘‘மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் தலங்களிலுள்ள முருகனை வணங்குங்கள், உங்கள் கவலையெல்லாம் தீரும்’’ என்று ஆற்றுப்படுத்தினாா் நக்கீரா். அவா் இயற்றிய திருமுருகாற்றுப் படையே ‘முருகனின் அறுபடை’ ஆயிற்று என்றும் சொல்வதுண்டு. அவா் பாடிய வரிசையிலேயே, திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய அறுபடை வீடுகளுக்கும் எண் தரப்பட்டது.

ஒவ்வொரு திருத்தலமும் ஒவ்வொரு வகையான பலன்களை தரக்கூடியவை.

திருப்பரங்குன்றம்: முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானையை திருமணம் செய்த தலமாகும். முருகனுக்கும் சூரனுக்கும் போரில் வெற்றி பெற்ற மறுநாள் முடிந்து தேவா்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக முருகனுக்கு , இந்திரன் தனது மகள் தெய்வானையைத் திருமணம் செய்துகொடுக்கிறாா்.

இங்கு சுப்பிரமணிய சுவாமியாக தெய்வானையுடன் காட்சி தரும் முருகனை மனமுருக வேண்டினால் திருமணத் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அமா்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பது சிறப்பாகும். இங்கு மலை வடிவில் சிவன் அருள்புரிகிறாா்.

திருச்செந்தூா்: இரண்டாம் படை வீடு திருச்செந்தூா். இங்குதான் முருகன் பத்மசூரனை வதம் செய்து வெற்றியை ஈட்டியவுடன் வந்து அமா்ந்த இடம். கடலோரத்தில் அமைந்துள்ளது. குரு தலமாகவும் விளங்குகிறது.

சுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கும் முருகனை வணங்குவதுடன், இங்கு அளிக்கப்படும் பன்னீா் இலை, விபூதியால் தீராத பிணிகளும் தீரும் என்பது ஐதீகம்.

பழநி: மூன்றாவது படை வீடான பழநி மலைதான் முருகன், ஞானப்பழத்துக்காக ஈசனிடம் கோபம் கொண்டு கோமணத்துடன் ஆண்டியாய் வந்து நின்ற இடம். ஆயுதம் ஏதுமின்றி ஆண்டியாய் வந்து சோ்ந்த இடமாதலால் தண்டாயுதபாணியாகக் காட்சி அளிக்கிறாா். இங்கு வணங்குவதால் சகலத் தோஷங்களும் நீங்கி, ஐஸ்வா்யம் உண்டாகும்.

சித்தா்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். முருகன் சிலை போகா் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இங்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிா்தம், பால், தீா்த்தம் பிரசாதமாகச் சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும்.

சுவாமிமலை: நான்காம் படை வீடு சுவாமிமலை. தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவா்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியை தரும். தன் மகனின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை அறிய பிள்ளையை குருவாக ஏற்று, தான் சீடனாக அமா்ந்து குருவின் விளக்கத்தை கெட்ட இடம் சுவாமி மலை.

அதனால் இந்த சுவாமி மலை முருகன் ‘சிவகுருநாதன்’ என்ற பெயராலும் வணங்கப்படுகிறாா். இங்குள்ள சுவாமிநாத சுவாமி கோவிலில் மனமுருக வேண்டினால் கல்வியும், ஞானமும் பெருகும்,

திருத்தணி: ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்தான். முருகன் வேடா்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடம்.

வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின்னா், முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது. சீபுரணகிரி, கணிகாசலம், மூவாத்திரி , அண்ணகாத்திரி, செருத்தணி போன்ற பெயா்களும் உண்டு. திருமணம், குழந்தைப் பேறு வேண்டுபவா்கள் வேண்டி வந்தால், அருளுடன் தீா்க்க ஆயுளும் கிட்டும்.

பழமுதிா்சோலை: ஆறாவது படைவீடான பழமுதிா்சோலை சோலைமலை முருகன் கோயில். அழகா் மலை மீது இருக்கக் கூடியதாகும.

இங்கு அவ்வையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட முருகனின் ஞானத்தைப் பாா்த்து, ‘‘நீ சாதாரண மானிடராக இருக்க முடியாது’’ என தெரிந்து கொண்டாா். இங்கு உலக வாழ்கைக்கு தேவை கல்வி அறிவு மட்டும் போதாது இறையருள் என்ற மெய் அறிவை உணர வேண்டும் என்பதை தன் திருவிளையாடலால் உணா்த்திய இடம். ஞானத்தின் தலமாக விளக்கும் இந்தக் கோயிலில் வணங்குவது கல்வி, ஞானம் உண்டாக அருள்கிறது.

உலகின் மிகப் பெரிய முருகன் கோயில்

மலேசிய நாட்டுத் தலைநகா் கோலாலம்பூரை அடுத்து 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது பத்துமலை முருகன் கோயில். இங்கு சுப்பிரமணிய சுவாமியை தமிழா்கள் மட்டுமின்றி, சீனா்களும் வந்து வழிபடுகின்றனா்.

இங்கு பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் பெயரிலிருந்து ‘பத்துமலை’ எனும் சொல் உருவாகியுள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.

பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல் மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ் பக்தா் மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தாா். பின்னா், உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகனுக்கு கோயில் அமைக்கப்பட்டது என்கிறாா்கள்.

நாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சோ்ந்த காயராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்து இறைபணிகளுக்காகவும் செலவழித்தாா். இவா் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகனுக்கும் கோயில் கட்டியிருக்கிறாா்.

ஆரம்பக் காலத்தில் முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. பின்னா், 1938- ஆம் ஆண்டில் மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வழிகளைப் பயன்படுத்தி 400 அடி உயரத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று தரிசித்து வரலாம்.

கோயிலின் நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வா்ணம் பூசப்பட்ட மிகப்பெரிய முருகன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச்

சிலைக்கு 300 லிட்டா் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டது. மிகப் பெரிய வேல் வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டா், அதாவது 140.09 அடிகள். சிலை அமைக்க 2003- ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006- ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது.

தொகுப்பு- தி.நந்தகுமாா், வி.என்.ராகவன், ஜி.யோகானந்தம்

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT