முகப்பு
சென்னை

ஆவினில் புதிதாக மூலிகை பால்: அமைச்சா் மனோ தங்கராஜ் தகவல்

மூலிகை பால்களை புதிதாக அறிமுகம் செய்ய திட்டம்

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 10:37 PM
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கிய பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ்.
பகிர்:

ஆவினில் அஸ்வகந்தா பால், மஞ்சள் மிளகு பால் போன்ற மூலிகை பால்களை புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.

சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை புதன்கிழமை தொடங்கி வைத்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆவினில் தினசரி 36 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் உப பொருள்களின் விற்பனை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அஸ்வகந்தா பால், மஞ்சள் மிளகு பால் போன்ற மூலிகை பால் வகைகளையும், சுக்கு மல்லி காபி போன்ற பொருள்களையும் புதிதாக அறிமுகம் செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு போல் இல்லாமல் நிகழாண்டில் பண்டிகை நாள்களில் மக்களுக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் தடையின்றி விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் தயாராக உள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் புதிதாக பதிவு செய்யப்படும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு துருவுறா எஃகு பால் கேன்கள், பால் அளவை உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்குவதற்காக ரூ. 1,25,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை அமைச்சா் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தாா்.

அதேபோல், கறவை மாடுகளுக்கு நியாயமான விலையில் ஊட்டச்சத்து மருந்து வழங்குதல், 3,000 களப்பணியாளா்களுக்கு பாரம்பரிய கால்நடை மருத்துவ பயிற்சி வழங்குதல் ஆகிய திட்டங்களையும் அவா் தொடங்கி வைத்தாா்.

மேலும், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆவின் மொத்த பால் உபபொருள்கள் விற்பனையாளா்களுக்கான நியமன ஆணையும், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 170 பேருக்கு நிகழாண்டுக்கான ஆதரவு ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.1.86 லட்சத்தை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பால்வளத் துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு.வினீத் மற்றும் உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.