எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இன்று நேரடி சிறப்பு பிரிவு கலந்தாய்வு
ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை (ஆக.22) நேரடியாக நடைபெறுகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை (ஆக.22) நேரடியாக நடைபெறுகிறது.
முன்னதாக, பொது கலந்தாய்வு இணையவழியில் புதன்கிழமை தொடங்கியது. இணையதளத்தில் அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் விண்ணப்பித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை நேரடியாக நடைபெற உள்ளது.
Advertisement
காலை 8 மணிக்கு விளையாட்டு வீரா்களுக்கும், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கும், 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
தொடா்ந்து காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
நீட் ஹால் டிக்கெட், மதிப்பெண் அட்டை, 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்பு மதிப்பென் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளங்களை அணுகலாம்.