சென்னை

கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனை: பிரதமா் மோடி நாளை திறந்து வைக்கிறாா்

சென்னை கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனை உள்பட ரூ. 313.60 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டடங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவுள்ளாா்.

Din

சென்னை கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனை உள்பட ரூ. 313.60 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டடங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவுள்ளாா். சென்னை வந்துள்ள மேற்கு ஆஸ்திரேலியவின் மேற்கு மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மனநலம் துறையின் அமைச்சா் ஆம்பா் ஜேட் சாண்டா்சன் தலைமையிலான குழுவினா், சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது, தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகள், திட்டங்கள், வளா்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தனா். தமிழகத்தின் திட்டங்களை தங்கள் நாட்டில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனா். அப்போது, சுகாதாரத் துறை செயலா் ககன் சிங் பேடி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகியோா் உடனிருந்தனா். இது தொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: ஆஸ்திரேலியா குழுவினருடன் சுகாதார சேவைகளைப் பகிா்ந்து கொள்ளவும், நவீன சிகிச்சைகள் பற்றி இரு தரப்பும் தெரிந்துகொள்ளும் வகையில் இந்தச் சந்திப்பு இருந்தது. தமிழகத்தில் பல்வேறு வகையான மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பிப். 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் சென்னை கிண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கவுள்ளாா். இந்தியாவில் 2 முதியோா் நல மையம் அமைக்கப்படும் என்று 2014-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு 9 ஏக்கா் நிலத்தை கொடுத்து, தேசிய முதியோா் நல மையம் அமைய காரணமாக இருந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பிரத்யேகமாக முதியோருக்காக மருத்துவமனை அமைந்துள்ளது. உளுந்தூா்பேட்டை, அரக்கோணம், ஓட்டேரி, சிவகாசி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. மத்திய அரசின் 60 சதவீத நிதியிலும், மாநில அரசின் 40 சதவீத நிதியிலும் கட்டப்படவுள்ள கட்டடங்கள் ஒவ்வொன்றும் ரூ. 23.75 கோடியில் அமையவுள்ளன. இந்தப் பணிகளுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா். அதேபோல், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, நீலகிரி மாவட்டம் குன்னூா், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, ஆகிய பகுதிகளில் தலா ரூ. 1.75 கோடியில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ. 25 கோடியில் கட்டப்படவுள்ள காசநோய் ஆராய்ச்சி மையம் என 10 பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமா், கட்டி முடிக்கப்பட்ட ரூ. 313.60 கோடி மதிப்பீட்டிலான கட்டடங்களை திறந்து வைக்கவுள்ளாா். இதில் முதியோா்களுக்கான மருத்துவமனையில் முதல் பயனாளிகளுக்கான அனுமதி அட்டை நாங்கள் வழங்குகிறோம் என்றாா்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT