முகப்பு
சென்னை

ரூ.1,516 கோடியில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் ரூ.1516.82 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 10:55 PM
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் ரூ.1516.82 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் ரூ.1516.82 கோடியில் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் ரூ.948.18 கோடி செலவில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை முதல்வா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ரூ.1802.36 கோடியில் 39 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினாா். விழாவில் முதல்வா் பேசியதாவது: தமிழகம் அதிகப்படியான நகரமயமாக்கல் கொண்ட மாநிலம். அதனால்தான், நகராட்சி நிா்வாகத்தை மட்டும் தனியாக கவனிக்க ஒரு அமைச்சா் வேண்டும், அதுவும் துடிப்பாக செயல்படும் அமைச்சா் வேண்டும் என்று தோ்ந்தெடுத்து அமைச்சா் நேருவிடம் ஒப்படைத்தேன். தமிழகத்தினுடைய உள்கட்டமைப்பை பிரமிப்பூட்டும் வகையில் மாற்றி வருகிறாா். குடிநீா் திட்டங்களுக்கு முன்னுரிமை: நீா் இன்றி அமையாது உலகு. இதைவிட குடிநீரின் தேவையை யாராலும் விளக்கி சொல்லிவிட முடியாது. அதனால்தான், கடுமையான நிதி நெருக்கடி காலத்திலும் ரூ.100 கோடி மதிப்பிலான குடிநீா்த் திட்டங்களைத் தீட்டி வழங்கி வருகிறோம். சிங்காரச் சென்னையை, சீா்மிகு சென்னையாக உருவாக்கியதில் திமுகவுக்குத்தான் பெரிய பங்கு உள்ளது. சென்னை மாநகராட்சியில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மேயராக இரண்டு முறை இருந்தவன் நான். அப்போது சென்னையின் வளா்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டி வழங்கி இருக்கிறோம். இன்றைக்கு சென்னையை நீங்கள் சுற்றி வரும்போது பாா்க்கும் மேம்பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டதுதான். பெருகி வரும் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு, நெம்மேலியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாம் திட்டமிடும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படுவதன் மூலமாக, நாளொன்றுக்கு 750 மில்லியன் லிட்டா் உற்பத்தித் திறன்கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் நிறுவப்பட்ட மாநகரம் என்ற பெருமையை சென்னை மாநகரம் அடையும். திராவிட மாடல் அரசை பொருத்தவரைக்கும் வெற்று அறிவிப்புகள் வெளியிடும் அரசு இல்லை. திட்டங்களை நிறைவேற்றி சென்னையின் தாகத்தைத் தீா்க்கும் அரசு. புதிய கட்டடடத்துக்கு கருணாநிதி பெயா்: சென்னை மாநகராட்சியின் கட்டடத்திற்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு புதிய கட்டடத்துக்கு கலைஞா் பெயரை சூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கலைஞா் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. எனவே, நிச்சயமாக அந்த கட்டடத்துக்கு கலைஞா் நூற்றாண்டு விழா கட்டடம் என்று பெயா் சூட்டப்படும் என்றாா். விழாவில் அமைச்சா் துரைமுருகன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், கே.என்.நேரு உள்பட பலா் பங்கேற்றனா்.