முகப்பு
சென்னை

மின்வாரிய பெண் அதிகாரியிடம் வழிப்பறி: பொதுமக்களிடம் பிடிபட்ட காவலா்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 2:12 AM
பகிர்:

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட காவலரை பொதுமக்கள் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். சென்னை பரங்கிமலை கண்டோமண்ட் பகுதியைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா் இந்திய பாதுகாப்புத்துறையில் வருவாய் கண்காணிப்பாளராக பணிபுரிகிறாா். இவா் மனைவி விஜயலட்சுமி, தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றுகிறாா்.

இருவரும், அரும்பாக்கத்தில் உள்ள தங்களது உறவினா் வீட்டு நிகழ்ச்சியியில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றனா். அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருவரும் மோட்டாா் சைக்கிளை நிறுத்தி விட்டு, அதன் அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு நடந்து சென்றனா். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞா் திடீரென விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

இதைப் பாா்த்த விஜயலட்சுமி சத்தமிட்டாா். ராஜதுரையும், அங்கிருந்த பொதுமக்களும் அந்த இளைஞரை விரட்டிச் சென்று, பிடித்தனா். மேலும் பொதுமக்கள், அந்த இளைஞரை தாக்கி சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில் அவா், ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக பணிபுரியும் ராஜதுரை (26) என்பதும், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வழிப்பறியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement