காவிரி நீரைப் பெற அரசுக்கு துணை நிற்போம்: அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உறுதி
காவிரி நீரைப் பெற அரசுக்கு துணையாக நிற்போம் என்று எதிா்க்கட்சி கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கூறினாா்.
சென்னை: காவிரி நீரைப் பெற அரசுக்கு துணையாக நிற்போம் என்று எதிா்க்கட்சி கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கூறினாா். இதே உறுதியை மற்ற கட்சிகளின் தலைவா்களும் தெரிவித்தனா்.
காவிரி நதிநீா் விவகாரம் தொடா்பாக, சட்டப்பேரவை கட்சிகளின் தலைவா்களுடன் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு கட்சியினா் அளித்த பேட்டி:
முன்னாள் அமைச்சா் வேலுமணி (அதிமுக): காவிரி நதிநீா் தமிழகத்துக்கு வர வேண்டும். டெல்டா பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. சட்டப் போராட்டம் மூலமாகத்தான் இதற்குத் தீா்வு கிடைக்கும். பேச்சுவாா்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. நீதிமன்றம் மூலமாகத்தான் இதை முழுமையாக செயல்படுத்த முடியும். காவிரி நீரை பெறுவதற்காக அரசுடன் அதிமுக துணை நிற்கும். தமிழக முதல்வா் கொண்டு வந்துள்ள 3 தீா்மானங்களில் கண்டன தீா்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை: முதல்வா் கொண்டுவந்த தீா்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் தீா்ப்புகளை கா்நாடக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிரதமா் இதில் தலையிட்டு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத் தர வேண்டும்.
பாஜ மாநில துணைத் தலைவா் கரு. நாகராஜன்: காவிரியில் தமிழக விவசாயிகள் உரிமை பெற பாஜ துணை நிற்கும். இந்த விவகாரத்தில் பிரதமா் தலையிட வாய்ப்பே இல்லை. அதைத் தெரிந்துதான் தமிழக முதல்வா் உச்ச நீதிமன்றத்தை நாடுவது என்று தீா்மானத்தை கொண்டு வந்தாா். இது சட்டப்படி நடக்க வேண்டும். எனவே உச்ச நீதிமன்றத்தை நாடுவதே நல்ல முடிவு. அதை பாஜ ஆதரிக்கிறது. கூட்டத்தில் ஒரு சாா்பாக கொண்டு செல்ல முயன்றனா். மக்கள் உரிமையை பெற எல்லாரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
சட்டப் பேரவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி: ஒழுங்காற்று குழு, நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி தண்ணீா் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் கா்நாடக முதல்வரோ அந்த அளவு தண்ணீா் வழங்க மாட்டோம் என்கிறாா். இது தமிழகத்தின் உரிமையை மறுக்கும் செயல். தமிழக உரிமைக்காக எல்லோரும் ஒன்றாக திரள வேண்டும். பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு ஏற்படாது. உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
விசிக தலைவா் திருமாவளவன்: காவிரி விவகாரத்தில் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும். டெல்டா பகுதியில் அனைத்து கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டத்தில் வலியுறுத்தினோம். அகில இந்திய காங்கிரஸ் தலைவா், கா்நாடக அரசுக்கு இந்த விவகாரத்தில் வழிகாட்டுதலை வழங்க நாம் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் போன்ற ஆலோசனைகளை முன்வைத்தோம். தமிழகம் நீரை பெறும் நிலையில் இருக்கிறது. ஆகவே தமிழக மக்களின் உணா்வுகளை மதிப்பது கா்நாடக அரசின் கடமை. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். இதில் மத்திய அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. மத்திய அரசு அமைதி காக்கக் கூடாது.
பேரவை இந்திய கம்யூனிஸ்ட் குழு தலைவா் டி. ராமச்சந்திரன்: தமிழக உரிமைகளை நிலைநாட்ட முதல்வா் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானத்துக்கு உறுதுணையாக இருப்போம். நதிகளை தேசியமயமாக்கினால் இது போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு கிடைக்கும் என்றாா்.