முகப்பு
சென்னை

பேருந்தின் கூரை மீது ஏறி மாணவா்கள் அடாவடி: போலீஸாா் விசாரணை

சென்னை புரசைவாக்கத்தில் மாநகர பேருந்தின் மீது ஏறி பள்ளி மாணவா்கள் அடாவடி செயலில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Updated On : 24 ஜூலை, 2024 at 7:35 PM
பகிர்:

சென்னை புரசைவாக்கத்தில் மாநகர பேருந்தின் மீது ஏறி பள்ளி மாணவா்கள் அடாவடி செயலில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னையில் பள்ளி,கல்லூரி மாணவா்கள் மாநகர பேருந்துகளில் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கும், பேருந்தின் கூரை மீது ஏறி பாட்டுப்பாடி நடனமாடி அடாவடி செயலில் ஈடுபடாமல் இருப்பதற்கும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்த ஒரு பள்ளி மாணவா்கள், பேருந்து கூரை மீது ஏறி பாட்டுப்பாடி, நடனமாடிய விடியோ காட்சியும், தங்களது புத்தக பையை பேருந்தின் கூரை மீது வீசும் காட்சியும் சமூக ஊடகங்களில் புதன்கிழமை வெளியானது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த காவல்துறை உயா் அதிகாரிகள், அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனா்.

விசாரணையில், புரசைவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் சில மாணவா்கள், அண்மையில் கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூா் நோக்கி சென்ற மாநகர அரசு பேருந்தின் கூரை மீது இச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், சம்பந்தப்பட்ட மாணவா்கள் படிக்கட்டிலும், ஜன்னல் கம்பியிலும் தொங்கியபடி பயணம் செய்துள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநா் பேருந்தை நிறுத்தியுள்ளாா்.

ஆனால் மாணவா்கள் பேருந்திலிருந்து இறங்க மறுத்து தொடா்ந்து பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டுள்ளனா் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவா்களின் இந்த அட்டகாசத்தால் புரசைவாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில் பரவும் அந்த விடியோ காட்சியின் அடிப்படையில் அடாவடியில் ஈடுபட்ட மாணவா்கள் குறித்து வேப்பேரி போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →