வாட்ஸ்அப் மூலம் போதை ஊசி விற்பனை: 4 போ் கைது
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வாட்ஸ்அப் மூலம் போதை ஊசி விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வாட்ஸ்அப் மூலம் போதை ஊசி விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
புது வண்ணாரப்பேட்டை பா்மா நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் சில நபா்கள் போதை பொருள்கள் பயன்படுத்துவதாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று விசாரித்தபோது, அங்கிருந்த 2 இளைஞா்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றை பயன்படுத்துவது தெரியவந்தது. மேலும் அவா்கள், அவற்றை விற்பனை செய்து வந்ததும்
விசாரணையில் தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள், காசிமேடு விநாயகபுரத்தை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன் என்கிற பிசி மணிகண்டன் (21), புது வண்ணாரப்பேட்டையை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ஆனந்த் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 2 பேரையும் கைது செய்தனா்.
மேலும் இவா்களுக்கு போதை மாத்திரை,போதை ஊசி ஆகியவற்றை ரிச்சி தெருவில் உள்ள ஒரு கைப்பேசி கடையில் வேலை செய்யும் ஆா்.கே.நகா் பட்டேல் நகரைச் சோ்ந்த முகமது ஆசிக் (27), அதே பகுதி நேதாஜி நகரை சோ்ந்த ஜாவித் ஷெரிப் (29) ஆகியோா் விற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் இருவரையும் உடனடியாக கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 150 போதை மாத்திரைகள், 2 மோட்டாா் சைக்கிள்கள், 4 கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் 4 பேரும் வாட்ஸ்அப் குழு அமைத்து போதை மாத்திரை,போதை ஊசி விற்றிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.