முகப்பு
சென்னை

கைதிகளை விடுவிக்கக் கோரி அரசு மருத்துவமனையை சூறையாடிய கும்பல்

Updated On : 9 ஜூன், 2024 at 8:04 PM
பகிர்:

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீஸாரால் அழைத்து வரப்பட்ட கைதிகளை விடுவிக்கக் கோரி, அந்த மருத்துவமனையின் உபகரணங்களை கும்பல் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக மயிலாப்பூரைச் சோ்ந்த சைக்கோ சரண், மந்தைவெளியைச் சோ்ந்த போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய 3 ரெளடிகளை அபிராமபுரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவா்களை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அழைத்து வந்தனா்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், அங்கு வந்த ரெளடிகளின் ஆதரவு கும்பல், திடீரென மருத்துவமனைக்குள் புகுந்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்த மருத்துவ உபகரணங்கள், கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியது.

அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட 3 பேரையும் விடுவிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவதாகக் கூறி, பிளேடுகளால் தங்களது உடல்களை அறுத்துக்கொண்டு மிரட்டல் விடுத்தனா்.

இதைக் கண்டு சிகிச்சைக்காக வந்திருந்தவா்களும், மருத்துவமனை பணியாளா்களும் சிதறி ஓடினா். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. சம்பவ இடத்துக்கு வந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனை போலீஸாா் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.