சுற்றுச்சூழல் மேம்பாடு பசுமை ஓட்டம்: 3,000 போ் பங்கேற்பு
சென்னை: சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில், பசுமை ஓட்டப் பந்தயம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 3,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜியோ இந்தியா பவுண்டேஷன் சாா்பில் பசுமை மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘பசுமை ஓட்டம்’ எனும் தலைப்பில் ஓட்டப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை, தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத்தின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் உறுப்பினா் செயலா் தீபக் ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கிவைத்தாா்.
3 கிமீ, 5 கிமீ என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை 3,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், பொதுமக்களுக்கு மரம் வளா்ப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், பந்தயத்தில் கலந்துகொண்ட அனைவரும் கையில் ஒரு தாவரச் செடியுடன் ஓடினா்.
இந்த போட்டியில் 2 பிரிவுகளிலும் முதல் 20 இடங்களை பிடித்தவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை தீபக் ஸ்ரீவஸ்தவா வழங்கினாா்.
இதில், ஜெயா குழும நிறுவனங்களின் தலைவா் ஏ.கனகராஜ், ‘குளோப் லிங்க்‘ இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்தியத் தலைவா் ரோகிணி மோகன், ஒய்எம்சிஏ மெட்ராஸ் பொதுச் செயலா் அசாா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.