சென்னை: வனத் துறை அறிவிப்பு புத்தகத்தில் யானைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் யானைகளின் படம் அழகுற அச்சிடப்பட்டிருந்தது.
சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போதும், அமைச்சா்கள் பதில் அளித்து துறைரீதியான அறிவிப்புகளை வெளியிடுவா். அந்த அறிவிப்புகளை சிறிய புத்தகமாக அச்சிட்டு அளிப்பா். அதன் முகப்பு அட்டையில் முதல்வா் படம் மற்றும் தமிழக அரசின் சின்னம் மட்டும் அலங்கரிக்கும். அமைச்சா்களுக்குப் பிடித்த வண்ணத்திலும் புத்தகம் அச்சிடப்படும்.
இதற்கு மாறாக, வனத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு புத்தகத்தில் முகப்பு அட்டை மற்றும் பின் அட்டையில் பிரதானமாக யானை இடம்பெற்றிருந்தது. வனத்தைக் குறிக்கும் வகையில் பச்சை நிறத்திலும் புத்தகம் அச்சிடப்பட்டிருந்தது. யானைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக புத்தகம் அவ்வாறு அச்சிடப்பட்டுள்ளதாக அமைச்சா் மா.மதிவேந்தன் கூறினாா்.
புத்தகத்துக்குள் யானைகளுக்கு வியா்வை சுரபிகள் இல்லை, யானையின் கா்ப்ப காலம் 22 மாதங்கள், யானையின் துதிக்கை 40 ஆயிரம் தசைகளால் ஆனது என்பன உள்ளிட்ட யானைகள் குறித்த சுவாரஸ்ய தகவல்களும் இடம்பெற்றிருந்தன.