முகப்பு
சென்னை

வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு: முதல்வருக்கு ராமதாஸ் கண்டனம்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மறுப்பு: ராமதாஸ் கண்டனம்

Updated On : 25 ஜூன், 2024 at 11:07 PM
பாமக நிறுவனா் ராமதாஸ்
பகிர்:

சென்னை: வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்படுவதாகக் கூறி, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஜி.கே.மணி, வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினாா். அதற்கு பதிலளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டத் துறை அமைச்சா் ரகுபதி ஆகியோா் தேசிய அளவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தினால் மட்டும்தான் தமிழகத்தில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறினாா்.

தமிழகத்தில் இதுவரை வழங்கப்பட்ட எந்த இட ஒதுக்கீடும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வழங்கப்படவில்லை. மாறாக, இடஒதுக்கீடு கோரும் சமூகங்களின் பின்தங்கிய நிலையின் அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கரோ, வன்னியா்களுக்கு 10.5 சதவீதத்துக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் இருப்பதாகக் கூறுகிறாா். எந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இதை அவா் கூறுகிறாா்? அது குறித்த அனைத்து புள்ளிவிவரங்களையும் அரசு வெளியிடுமா?

வன்னிய மக்களுக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை செய்ய மறுத்தால் கடந்த காலங்களில் நடத்தியதைவிட மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி, இடஒதுக்கீட்டை வென்றெடுப்போம் என்று அவா் கூறியுள்ளாா்.